கொடுமையான காத்திருப்பாய் இருந்தது. என்னவெல்லாம் நடக்கக் கூடாதோ அதுவெல்லாம் ஏற்கனவே நடந்து முடிந்துவிட்டது. அதன் உச்ச கட்டமாய் அப்பாவின் வருகைக்கான காத்திருப்பு.
அடிபட்ட இடங்கள் வலித்துக் கொன்றன. வீங்கிய பகுதிகளை கைகள் அனிச்சையாய் தேய்த்துக் கொடுத்தன. நண்பர்கள் வலி தாங்கிய முகத்தோடு அமைதியாய் இருந்தார்கள்.
பவர் ஹவுஸில் வேலை பார்த்துக் கொண்டிருந்த அப்பாவிற்கு தகவல் சொல்லப் பட்டுவிட்டது. இன்னும் கொஞ்ச நேரத்தில் வந்து விடுவார். வந்து என்ன செய்வார் என்பதை ஊகிக்க முடியவில்லை.
சாமி வருவது போல் வரும் அப்பாவுக்குக் கோபம். கோபம் வந்ததென்றால் கைக்குக் கிடைத்த பொருள்கள் பறக்கும். சிறு வயதில் நொடிக்கொரு தடவை அம்மாவிடம் அடி வாங்கினாலும் பயம் வந்ததே இல்லை. மாறாக அப்பாவின் முறைப்பே நடுங்கடித்து விடும். முதுகெலும்பை ஊடுருவும் அவரின் பார்வையில் அது வரையிலான அத்தனை தீர்மானங்களையும் போட்டுடைத்து சரணடைந்து விடுவோம் நானும், அக்காவும், தம்பியும்.
அம்மாவுடன் சண்டை போட்டுக் கோபத்தில் சாப்பிடாமல் கிடப்பேன். அப்பா வந்தவுடன் அம்மா வழக்கைக் கொண்டு போகும். போய்ச் சாப்பிடு என்ற ஒரு வார்த்தையை அப்பா தீர்பாய் சொல்வார். தாமதிக்காமல் போய் சாப்பிட்டு விடுவேன். நொடி தாமதித்தாலும் முதுகு வீங்கி விடும் என்பதை அனுபவ ரீதியாய் உணர்ந்ததே காரணம்.
நாங்கள் மூவரும் அணையின் நுழைவுப்பகுதியின் சுவரில் உட்கார்ந்திருக்கிறோம். அதிகாரியும் அடித்த நால்வரும் காவல்காரர்கள் மாதிரி நின்றிருக்கிறார்கள்.
சோலையார் அணைக்கு வந்து பத்து வருடங்களாகி விட்டது. ஊரில் அனைவருக்கும் அப்பாவைத் தெரியும். அனைவரும் மதிக்கும் படியாய் இருந்தார். அவருக்கு இன்று என்னால் அசிங்கம்.
சென்னை சென்ற ஒன்றரை ஆண்டுகளாய் அப்பாவும் பையன் ஏதாவது சாதிப்பான் என்ற நம்பிக்கையில் கொஞ்சம் மரியாதையாய் நடத்தி வந்தார்.
நேற்று தான் சென்னையில் இருந்து விடுமுறைக்கு வந்தேன். மறு நாளே இப்படி ஒரு சம்பவம்.
வால்பாறையில் இருந்து முக்கால் மணி நேர பேருந்துப் பயணத்திற்குப் பின்னான ஊர் சோலையார் அணை. இந்தியாவிலேயே இரண்டாவது உயரமான அணைக்கட்டு.
அணையைப் பாதுகாக்க பொதுப் பணித்துறையும், மீன்களைப் பாதுக்காக்க வளர்க்க, பிடித்து விற்க மீன் வளத்துறையும் ,அணையின் நீரில் மின்சாரம் எடுக்க
மின்சார வாரியமும் அங்கு இருக்கின்றது.
அப்பா மின் வாரியத்திற்காக இங்கு மின்சாரம் எடுக்க வந்திருக்கும் பலரில் ஒருவர். சிறு வயதில் இருந்து இங்கேயே இருந்து வருவதால் இதுச் சொந்த ஊரைப் போல ஆகிவிட்டிருந்தது.
அங்கிருக்கும் அனைவரையும் தெரியும். அணையையே நீச்சலிட்டு பலமுறை கலக்கி இருக்கிறோம் கூட்டமாக. அப்பாவைத் தெரியாதவர்கள் யாரும் இருக்கமாட்டார்கள். அவர் பெயரைச் சொன்னால் எதுவும் நடக்கும். அப்படி நினைத்துச் செய்தது தான் இப்படி முடிந்திருக்கிறது.
சென்னைக்குப் போய் ஒன்றரை ஆண்டுகளுக்குப் பிறகு திரும்பி இருந்தேன். பக்கத்து வீட்டில் இருக்கும் அதிகாரியின் (ஏ.இ மெக்கனிக்கல்) மைத்துனனும் அவனது நண்பன் ஒருவனும் கல்லூரி விடுமுறைக்கு திருச்சியில் இருந்து வந்திருந்தார்கள்.
ஊரிலிருந்து வந்த உடன் நேற்றைக்கு அறிமுகம் ஆனார்கள். இன்று காலையில் அணையைச் சுற்றிப்பார்க்க வேண்டும் என்ற அவர்களின் அழைப்புக்கு இணங்கி கிளம்பினேன். அப்போதும் தெரியாது இப்படி ஒரு அசம்பாவிதம் நிகழப் போகிறதென்று.
சந்தோசமாகக் கிளம்பினோம். அணை, வீட்டில் இருந்து பத்து நிமிடம் நடக்கும் தொலைவில் தான். அணையின் அனைத்துப் பகுதிகளையும் பல வருடங்கள் இங்கு வாழ்ந்த அனுபவத்தால் வந்த நுணுக்கத்தோடும் செய்திகளொடும் சுற்றிக் காட்டினேன்.
ஒத்த வயதுடையவர்கள் என்பதால் கலகலப்பாய் நேரம் போய்க்கொண்டிருந்ததது. அணைக்குள் இறங்கி நீரில் விளையாடிக் கொண்டிருந்த போது அங்கு கிடந்த பரிசலைப் பார்த்த உடன் நண்பர்களில் ஒருவன் கேட்டான் இதுல ஏறிப் போகலாமா? என்று.
நான் ஏற்கனவே பல முறைப் போயிருக்கிறேன் ஆனால் தனியாக அல்ல மின்வளத் துறைப் பணியாளர்களுடன்.இயந்திர படகில் கூட பலமுறை பயணித்திருக்கிறேன். இரண்டு நண்பர்கள் முகத்திலும் அப்படி ஒரு ஆவல். பெரும்பாலும் தெரிந்த அதிகாரிகள் தான் இருப்பார்கள் எனவே போகலாம் என்று சொல்லிவிட்டேன்.
உற்சாகக் கூச்சலிட்டார்கள் நண்பர்கள். ஒரு பெரிய வடைச் சட்டியைக் கவிழ்த்தது போல் கிடந்தது பரிசல். நிமிர்த்தினோம். பெரிய பளுவாக இல்லை. கவனமாய் நீரில் மிதக்கவிட்டோம். முதலில் அவர்களை ஏறவிட்டுப் பிடித்துக் கொண்டேன்.
கடைசியில் கவனமாக துடுப்போடு ஏறிக் கொண்டேன்.
ஏதோ சாதித்துக் கொண்டிருப்பது மாதிரி மலர்ந்திருந்தது நண்பர்களின் முகம். துடுப்புப் போட்டு பழக்கம் இல்லாததல் துடுப்புப் போடப் போட தட்டாமாலை சுற்றிக் கொண்டிருந்தது பரிசல். பிறகொரு முயற்சியில் முன்னகரத் துவங்கியது.
தொடர்ந்தது சாகசப் பயணம்.
அணை நீர் எத்தனைப் பனை மர உயரங்களை நிரப்பி விட்டு அமைதியாய் இருக்கிறது என்பதை நினைக்கும் போது கொஞ்சம் பதட்டமாக இருந்தது. ஆனாலும் எல்லோரும் நீச்சல் தெரிந்தவர்கள் என்ற தைரியம் அடுத்தடுத்த துடுப்புத் தள்ளல்களுக்கான காரணமாக இருந்தது.
அணை நீரின் குளுகுளுப்பும், அக்கரையில் அடர்ந்து கிடக்கும் காட்டு மரங்களின் வனப்பும், துடுப்பை நீரில் வைக்கும் போது துவங்கும் சிறுவட்டம்
அணை முழுக்க பெரும் வட்டமாகி விரிகிற மாயஅழகும் அற்புதமாய் இருந்தது.
உலவும் தென்றல் காற்றினிலே என்று பாடத் துவங்கினான் அதிகாரியின் மைத்துனன். பாடி பழக்கம் இல்லாத குரலின் பாடலாக இருந்தது அது. பாடும் துணிச்சலற்றவனையும் பாட வைக்கும் சூழல் தான் பாட்டுப் போன்ற ஒன்றையும் இனித்து ரசிக்க வைத்துக் கொண்டிருந்தது. இதை விட இன்பமான பொழுதே இருக்கப் போவதில்லை என்று எண்ணிக் கொண்டிருக்கும் போதே கரையில் காத்திருந்தது வாழ்வில் மறக்க முடியாத வலி.
அணையின் நடுப் பகுதியில் இருந்தே திருப்பிவிட்டோம். யாருக்கும் திரும்ப மனம் இல்லை. ஆனாலும் நேரமாகிவிட்டிருந்தது. கரையை நெருங்கும் போது நாலைந்து ஆட்கள் ஓடி வருவது தெரிந்தது. யாரோ என்னவோ என்று நினைத்து விட்டோம்.
அவர்கள் கரையில் காத்திருந்தார்கள். தண்ணீரை விட்டு இறங்கியது தான் தாமதம் சரமாரியாக அடிகள் விழத்துவங்கியது. கட்டை கம்புகளோடு தயாராய் இருந்திருக்கிறார்கள். துளியும் எதிர்பாராத ஒரு விபத்தைப் போல் இருந்தது. என்ன ஏது என்று நிதானிப்பதற்குள் தட தடவென்று அடிகள் இறங்கின.
ஒன்று கூடத் தெரிந்த முகமாய் இல்லை. லுங்கியும் பனியனும், சட்டையுமாய் அடியாட்களை போன்ற நாலு பேர். பேன்ட் சட்டையுடன் ஒருவன். ஒன்றும் புரியவில்லை. திரைப் பட கதாநாயகன் திடிரென்று அத்தனை பேரையும் அடித்துத் தூக்கிப் போட்டு பந்தாடுவது எத்தனைஏமாற்று வேலை என்று சுள்ளென்று உரைத்த கணம் அது.
அத்தனை அடி அடித்தவனையும் திருப்பி ஒரு அடி கூட அடிக்காத என்னை ஆச்சரியமாகத்தான் இருக்கிறது இப்போதும். கோபம் வேறு அடுத்தவனை அடிக்கும் முரடுத்தனம் வேறு போல.
கொஞ்ச நேரத்திற்குப் பின் பொறுமையிழந்து ‘யாருடா நீங்க சும்மா விடமாட்டேன்டா ஒங்கள’ எனது பெரும் சப்தத்தில் சண்டை நிறுத்தி அமைதியானார்கள்.
தைரியமாய் எதிர்த்து அடிக்காவிட்டாலும் தைரியாமாய் சப்தமிட்டதும் தான் கைகளால் பேசுவதை நிறுத்தி வாய்ப் பேச்சிற்குத்தயாரானார்கள்.
அணையின் மேல் பகுதிக்கு வந்த பிறகு தான் அடி விழுந்ததற்கான காரணம் தெரிந்தது. மீன்வளத் துறையின் புதிய அதிகாரியும் புதிய மீனவர்களும் தான் அவர்கள். நான் சென்னையில் இருந்த காலத்தில் புதிதாய் வந்தவர்கள்.
சுற்றியிருக்கும் எஸ்டேட்டைச் சேர்ந்த யாரோ பரிசல் ஒன்றை ஏற்கனவே திருடிப் போய் திரும்பக் கிடைக்காத நிலையில் புதிய பரிசலைக்காப்பாற்றும் நடவடிக்கையாக நடந்திருக்கிறது அடி தடி.
புதிய பரிசலைத் திருடிப் போக முயற்சிக்கும் முகம் தெரியாத நபர்களாக நினைத்துத் தான் அவர்கள் தாக்கி இருக்கிறார்கள். ஒருவர் கூட தெரியாதவராய் போனதினால் எல்லாம் நேர்ந்தது. மின்வாரிய பையன்களுக்கு கொஞ்சம் சலுகை உண்டென்றாலும் என்னைத் தெரியாததில் வந்த குழப்பம்.
நாங்கள் மின்வாரிய குடியிருப்பைச் சேர்ந்தவர்கள் என்று அதிகாரி நம்பவில்லை. அப்பாவின் பெயர் சொல்லியும் அவருக்குத் தெரியவில்லை என்பது கூடுதல் சோகம். பின் அப்பா வந்து சொன்னால் தான் விடுவோம் இல்லையென்றால் காவல்நிலையம் என்றார்.
காத்திருக்கும் போது என்ன ஏது என்று விசாரிக்காமல் இப்படியா அடிப்பீர்கள். கொலை முயற்சின்னு கேஸ் கொடுப்பேன் என்று அதிகாரியைப் பார்த்து கத்தினேன்.
நண்பர்களைப் பார்க்கச் சங்கடமாக இருந்தது. அவர்களும் எங்களால் தானே இப்படி ஆனது என்றார்கள். எங்கள் ஊரில் என்றால் இதில யாரும் உயிரோட இருக்கமாட்டார்கள் என்றார்கள் காதோரமாய்.
என் மனசு படபடத்துக் கொண்டிருந்தது. நான் பெரிய மனிதனாகி விட்டேன். எனக்கும் எல்லாம் தெரியும் என்று பெரிய மனித பாவனையில் நெஞ்சத்சைத் தூக்கி நடந்து விட்டு. அதை வீட்டில் உள்ளோரும் நம்பத் துவங்கும் நேரத்தில் இது. அப்பாவின் கருணையை வேண்டி காத்திருக்கிறது என் தப்பித்தல். அப்பாவின் கைகளில் ஒரு பந்தைப் போல சிக்கி இருக்கிறது என் தலை.
அவரின் நல்ல பெயருக்கு களங்கம் விளைவித்து இப்படி நடுத்தெருவுக்கு அழைத்து வந்த கோபம் எப்படி வெடிக்கப் போகிறதோ?
கைகளில் கால்களில் எல்லாம் வீங்கியிருந்தது. பல இடங்களில் ரத்தம் கன்றிப் போயிருந்தது. நேரமாகி விட்டது அப்பா எந்த நேரம் வரலாம். இந்த வலிகளை விட அவமானத்தை விட அப்பா என்ன செய்வார் என்பதே எதிர்பார்ப்பாய் இருந்தது.
கோபத்தில் வயது பாராமல் அவரும் நாலு அடி அடித்தாலும் அடிப்பார். இந்த அடிகளை விட அந்த அடிக்குத் தான் வலி அதிகமாய் இருக்கும். மனவலி. நடப்பதை ஏற்றுக் கொள்வதைத் தவிர வேறு வழியென்ன இருக்கிறது இப்போது.
வேகமாய் வந்து நின்றது ஈபி வேன். நின்று வண்டியின் இஞ்சின் அணையும் முன் அவசரமாய் இறங்குகிறது அப்பாவின் கால்கள். படபடத்து ஓடி வராமல் அழுத்தமாய் நடந்து வருகிறார் எங்களை நோக்கி.
இரண்டு நிமிடங்களில் தெரிந்து விடும் எல்லாம். மனசு எதற்கும் தயாராகத் தான் இருக்கிறது. அதுவரை உட்கார்ந்து இருந்தவன் அப்பாவைப் பார்த்ததும் எழுந்து நின்று கொண்டேன்.
அப்பாவைப் பார்த்ததும் அந்த அதிகாரி ‘சாரா, உங்க அப்பா’ என்று சொல்லி உதட்டைக் கடித்துக் கொண்டான்.
அப்பாவின் முகம் கோபத்தில் சிவந்திருக்கிறது. அப்பா நெருங்க நெருங்க என்னை அறியாமல் அது வரையிலும் கலங்காது இருந்த கண்கள் மழுக்கென்று நிறைந்தது.
அப்பா எதையும் கவனிக்காமல் என் முன்னால் வந்து நின்றார். என் தலை தானே கவிழ்ந்து கொண்டது. அடி வாங்குவதற்கும் அல்லது திட்டு வாங்குவதற்கும் புலன்கள் தயாரானது.
அப்பா என்ன நடந்தது என்றார் என்னிடம். அந்தக் குரலில் கோபமும்,அழுத்தமும்,முக்கியமான வழக்கில் தீர்ப்புக்கு முன்னால் கவனமாக விசாரிக்கும் நீதிபதியின் கண்ணியமும் ஒரு சேர கலந்திருந்தது.
என் குரல் உடைந்து போனது. நடந்ததையெல்லாம் சொன்னேன். சொல்லச் சொல்லவே எத்தக் கணத்தில் கோபம் தலைக்கேறி அவரை அறியாமல் வெடிக்குமோ என்று எதிர் பார்த்த படியே இருந்தேன்.
அடிச்சுட்டாங்க என்று நான் சொல்லி முடிப்பதற்குள் அப்பாவின் உடம்பு ஒருமுறை சிலிர்த்துக் கொண்டது. கீழுத்தட்டைக் கடித்துக் கொண்டார். கண்கள் இன்னும் சிவந்தது. நான் சொன்னது ஏதும் காதில் விழுந்ததாய்த்தெரியவில்லை.
யாருடா உன்னை அடிச்சது என்ற உறுமல் சப்தத்தோடு அதிகாரியை நோக்கி நடக்கத் துவங்கினார். இது வரையில் எப்போதுமே பார்த்திராத அப்பாவின் உக்கிரம்.என்னால் நம்ப முடியவில்லை. அதிகாரியும் மற்றவர்களும் மிரண்டு பின் வாங்கினார்கள்.
அப்பா வேகமாய் அவர்களை நோக்கி நடக்கிறார். எதையும் செய்யத் தயங்காத கண்மண் தெரியாத கோபம். கோபம் என்பதை விடவும் அதைத் தாண்டிய வெறி அல்லது வேறேதோ ஒன்று. தனது குட்டிகளை,குஞ்சுகளை வேட்டையாட வருபவைகளிடம் தாயானபறவைகளுக்கும், விலங்குகளுக்கும் வருமே அதைப் போல ஒன்று.
அப்பா போன வேகத்தில் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம். திடிரென சுதாரித்துக் கொண்டு ஓடினேன். அப்பாவைப் பிடித்துக் கொண்டேன். பிடிக்க முடியவில்லை. சாமி வந்தவர்களுக்கு வரும் வேகத்தில் திமிறினார்.தப்பு என்னோடது தாம்பா என்று கெஞ்சினேன்.
‘தப்பு நடந்துன்னா என்ன வேணாலும் பண்ணு, ஆன அடிக்க நீ யார்ரா’ என்று சப்தம் போட்டார். அதிகாரியும் மற்றவர்களும் அச்சத்தில் வாயடைத்து நின்றிருந்தார்கள். இதை எதிர்பார்க்காத வேனின் ஓட்டுனரும் வந்து அப்பாவைப் பிடித்துக் கொண்டார்.
அதற்குள் பொதுப் பணித் துறையின் உயரதிகாரி ஜீப்பில் வந்து சேர்ந்தார். அவர் பல ஆண்டுகளாய் அப்பாவோடு நன்றாக பழகியவர். எனக்கும் அவரைத்தெரியும். அவர் வந்து அப்பாவைச் சமாதானப்படுத்தியும் அப்பா சமாதானமாகவில்லை. எப்படி அடிக்கலாம் என்ற கேள்வியைத் திரும்பத் திரும்ப கேட்டுக் கொண்டிருந்தார்.
கடைசியில் அந்த அதிகாரி மன்னிப்புக் கேட்டார்.ஒரு வழியாய் பிரச்சனை தீர்ந்தது.
இந்த மனுசனுக்கு இப்படி ஓரு கோபமா நம்பவே முடியல என்று அப்பாவின் கோபத்தை கதையாய் பேசிக் கொண்டார்கள் ஊரில்.
அபூர்வமாய் காணக் கிடைப்பதும், அப்பாக்கள் வெளிப்படுத்தாது உள் உறங்கிக் கிடப்பதுமான இன்னொரு முகத்தையும் தரிசனப் படுத்தியதற்கு அந்த வலிகளுக்கும், சம்பவத்திற்கும் என்றும் நன்றியோடிருக்கக் கடமைப் பட்டவன் நான்.