சார், யாரு ?’ என்று என் பக்கம் திரும்பிக்
கேட்டார் அவர். கேட்டவர் நடந்து கொண்டிருக்கும்
படப்பிடிப்பின் இயக்குனர். கேட்ட இடம்
ஏவிஎம் படப்பிடிப்புத் தளம்.
சென்னை வந்து சில ஆண்டுகளாகியும்
உதவி இயக்குநராக வாய்ப்பு கிடைக்காத
நிலையில், அப்பா தனக்குத் தெரிந்தவரும்,
தற்போது நடந்து கொண்டிருக்கும் படப்பிடிப்பின்
தயாரிப்பாளரும் கதாநாயகருமான புகழ் பெற்ற
நடிகரின் நெருங்கிய நண்பருமான ஒருவரிடம்
சிபாரிசு கடிதம் வாங்கி கொடுத்து இருந்தார்.
கடிதமும் எதிர்பார்ப்புமாக நடிகரை சந்திக்க
காத்துக் கொண்டிருதேன்.
இன்னும் அரை மணி நேரத்தில் உணவு
இடைவேளை விட்டு விடுவார்கள்.
அப்போது தான் அவரைப் பார்க்க வேண்டும்
என்று அறிவுறுத்தப் பட்டிருந்தேன்.
என் வாழ்க்கையை தீர்மானிக்கப் போகிற
வினாடிக்காக பதட்டமும், பரபரப்பும், சற்று
சந்தோசமும், வருத்தமுமாக கலவையான
எண்ண ஓட்டங்களோடு காத்திருந்தேன்.
இவ்வளவு அருகில் இருந்து இவ்வளவு
நேரம் படப்பிடிப்பை பார்க்கக் கிடைத்தே
பாக்கியமாய் உணர்ந்தேன்.
இடையில் கிடைத்த இடைவேளையின்
போது எனக்குப் பக்கத்தில் வந்து நின்றார்
இயக்குனர். இணை இயக்குனர் ஒருவரும்
உடன் இருந்தார். வேடிக்கையாய் அவர்கள்
பேசிய ஒரு விசயம் என் காதிலும் விழுந்ததில்
அனிச்சையாய் சிரித்துவிட்டேன்.
இயக்குனரும், உதவியாளரும் திரும்பிப் பார்த்தார்கள்.
படப்பிடிப்புக்குத் தொடர்பில்லாத யாரிவன் என்று
பார்த்தார்கள். நான் மனசுக்குள் இன்னும் கொஞ்ச
நேரத்தில் உங்களுக்குத் தெரிந்தவனாகி விடுவேன்
என்று சொல்லிக் கொண்டேன்.
அப்போது தான் ‘ சார் யாரு?’ என்றார்
இயக்குனர் என்னைப் பார்த்து. யாரைப்
பார்க்க வந்திருக்கிறேன் என்று சொன்னதும்
பிரேக்கில பாருங்க என்று சிரித்த படி சொன்னார்.
எதற்காகவென்று அவர் கேட்கவில்லை. அதற்குள்
‘ரெடி ரெடி’ ஒளிப்பதிவாளர் குரல் கொடுக்க இயக்குனரும்
இணை இயக்குனரும் அவசரமாய் கிளம்பினார்கள்.
அது காவல்நிலைய செட். அவ்வளவு இயல்பாய்
இருந்தது அது. ஒருமுறை சுவரில் சாயும் போது
அது துணி என்பது உரைத்தது. சில இடங்களில்
காட் போர்டு சுவர்கள். எது நிசம் எது பொய் என்பதை
அறிய முடியாமல் மர்மமாய் இருந்தது.
டிராலி, கிரேன், கிளாப், மைக், நாகரா, லைட்டுகள்
என்று ஒவ்வொன்றாய் வேடிக்கை பார்த்துக்
கொண்டிருந்தேன். திடிரென்று ‘பிரேக்’ என்று
உரத்த சத்தம் கேட்டது. உணவு இடைவேளை
அறிவிக்கப்பட்டாயிற்று கல்லுக்கு உயிர் வந்தது
போல பரபரப்பாகிவிட்டேன்.
உடலுக்குள் ரத்தம் வேகமா ஓடத் துவங்கியது.
இயக்குனருடன் பேசிய படி கதாநாயகன் செட்டுக்கு
வெளியே நடக்கத் துவங்கினார். நானும் ஓடிப்
பின் தொடர்ந்தேன்.
செட்டுக்கு வெளியே ரசிகர்கள் கூட்டம் காத்திருந்தது.
‘தலைவர் வாழ்க’ கோஷம் முழங்கியது. கதாநாயகன்
வந்ததும் கூட்டம் சூழ்ந்து கொண்டது. ஆளூயர
மாலைகள் போட்டார்கள். போட்டோ எடுத்தார்கள்.
நான் யாரென்று தெரியாத அவரை இந்த கூட்டத்தில்
எப்படி சந்திக்கப் போகிறேன் என்று கலங்கினேன்.
பசியை வெளிக் காட்டாமல் ரசிகர்களிடம் பேசினார்.
ஒரு வழியாக கை கூப்பி வணங்கி விடை பெற்றார்.
அவரது வெளிநாட்டுக் காரை நோக்கி அவரும்
இயக்குனரும் நடந்தார்கள். நான் குறிப்பிட்ட
இடைவெளியில் அவர்களைப் பின் தொடர்ந்தேன்.
அவர்கள் பேசிய படியே இருந்ததால்
தொந்தரவு செய்து விடக் கூடாது என்று
அமைதியாய் பின் நடந்தேன். அதை நடை என்று
சொல்ல முடியாது நடைக்கும் ஓட்டத்திற்கும்
இடைப்பட்ட ஒன்று.
அவர்கள் காரை நெருங்கி விட்டார்கள். என்
முகம் தெரியும் படியாய் அவருக்கு முன்னே
சென்று ‘சார்’என்றேன். கடிதத்தோடு நிற்கும்
என்னைப் பார்த்து ஒன்றும் புரியாத
முகபாவத்தோடு ‘ என்ன’ என்றார். ‘எஸ்டேட்
அரவிந் சார் அனுப்புனாரு’ என்றபடி கடிதத்தை
கொடுத்தேன்.
‘ம்.. போன் பண்ணிருந்தான்’ என்ற படி கடிதத்தைப்
படித்தார். கடிதத்தைப் படித்து முடித்த உடன்
‘என்ன படிச்சிருக்கீங்க’ என்றார். ‘பீகாம்’ என்றேன்.
பெயரைக் கேட்டார். சொன்னேன். சிறிது
யோசனைக்குப் பின் இயக்குனரை பெயர் சொல்லி
கூப்பிட்டார். இயக்குனர் பவ்வியமாய் ‘சார்’ என்றார்.
‘இந்தப் பையனை உங்க அஸிஸ்டென்டா
வச்சிக்கங்க’ என்றார். கிட்டத் தட்ட உத்தரவு போலத்
தான் இருந்தது. ‘சரிங்க சார்’ என்று தலை
வணங்கினார் இயக்குனர்.
என் பெயர் சொல்லி கூப்பிட்டார் கதாநாயகன்.
அடக்கமாய் பார்த்தேன்.’நல்லா ஓர்க் பன்ணுங்க.
அடுத்தடுத்து சீக்கிரமா வளரனும். போய் சாப்பிடுங்க
மதியானத்தில இருந்து ஓர்க் பண்ணுங்க.
பெஸ்ட் ஆப் லக்’ என்று சொல்லி கை குலுக்கினார்.
காரில் ஏறி கிளம்பினார்.
நடந்ததை நம்ப முடியாமல் கார் போவதைப்
பார்த்துக் கொண்டிருந்தேன்.
ஒரு கடிதம். ஒரு வார்த்தை.ஒரு கணம்.
ஒருவனின் வாழ்வையே தலைகீழாக்கி
விட்டது.
‘ டே’ என்று குரல் கேட்டது.
என்னை யார் இங்கு அப்படி கூப்பிடப்
போகிறார்கள் என்று நினைத்த படி
என் சந்தோசத்தைக் கொண்டாடிக்
கொண்டிருந்தேன்.
‘ டே உன்னைத்தான்டா’ என்றது குரல்
பின்னிருந்து. சந்தேகத்தோடு திரும்பினால்
அழைத்து இயக்குனர். அதிர்ச்சியாய் இருந்தது.
‘உன் பேர் என்னடா’ என்றார்.
பதில் சொன்னேன்.
‘கிளாப் எப்பிடி அடிகிறதுன்னு பாத்துக்க
நாளைல இருந்து நீ தான் அடிக்கணும்
சீக்கிரம் சாப்பிட்டு வாடா’ சொல்லிவிட்டு
போனார்.
கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி சார்ன்னு
கூப்பிட்டவர் அத்தனை சீக்கிரமாய்
டே க்கு இறங்கி விட்டாரே என்று
யோசித்தேன்.
இத்தனைக்கும் இயக்குனரும் இளையவர்
தான். ஒரு வேளை உதவி இயக்குனர்களை
இயக்குனர்கள் அப்படித் தான் கூப்பிட
வேண்டுமோ என்னமோ? கட்டாயம்
அப்படியெல்லாம் இருக்காது. தன்னம்பிக்கை
அற்ற சிலர் தன் அதிகாரத்தை நிறுவும்
பொருட்டு செய்யும் அல்ப தந்திரம்
அது என்பதை விளங்கிக் கொள்ள
அதிக நேரம் ஆகவில்லை.
சினிமாவில் எனக்கான முதல் பாடமாய்
இதிலிருந்து துவங்கலாம் என்று
தோன்றியது. சில பாடங்கள் பின்பற்றுவதற்காக
சில பாடங்கள் பின் பற்றாமல் இருக்க என்பதை
நினைத்த படி செட்டுக்குள் நுழைந்தேன்.
ஒக்ரோபர் 23, 2007 at 11:00 முப
//
சில பாடங்கள் பின்பற்றுவதற்காக
சில பாடங்கள் பின் பற்றாமல் இருக்க என்பதை
நினைத்த படி செட்டுக்குள் நுழைந்தேன்.//
Excellent.
நவம்பர் 3, 2007 at 5:53 முப
nandri raja. how r u and kavitha,akhil and kutty papa. indru padithean nandraga irukkirathu. thodarnthu niraiya ezhuthavum. thank u.
பிப்ரவரி 10, 2008 at 5:36 பிப
அருமையான அனுபவப் பதிவு.
மார்ச் 12, 2008 at 3:05 முப
அருமை நண்பரே! ஏ.வி.ம் என்றதும் கற்பனை விரிகிறது.
ஓகஸ்ட் 10, 2009 at 6:45 பிப
என் பெயர் மகுடபதி
தங்கள் நடந்த கதை பார்த்தேன் மிக நன்றாக உள்ளது
மே 20, 2012 at 12:12 பிப
அருமை, அருமை. பல நினைவுகளை திரும்பிபார்க்க வைக்கும் பதிவு , நன்றி
மே 25, 2012 at 1:34 பிப
நன்றி கீர்த்தி…