‘சமயா, பேச்சியம்மா, எல்லாருக்கும் கைகால் சொகத்தக் குடு. என் பேரப்பிள்ளைக நல்லா படிச்சு, நல்லா இருக்கணும்’ சாமிரூமில் ஆத்தா
மனமுருகிப் பிரார்த்தித்தை டேப் ரெக்கார்டர் மீண்டும் சொல்லியது.
ஆத்தாவிற்கு ஆச்சரியம் தாங்க முடியவில்லை. மீண்டும் மீண்டும் அதையே ஓடவிட்டேன். ‘அடியாத்தே’ என்று ஆத்தா கன்னத்தில்
விரல்களை வைத்துக் கவனித்தது. நான்,தம்பி, அப்பா, அம்மா,
எல்லோரும் சிரித்தோம்.
ஒன்பதாம் வகுப்பு முழு ஆண்டு தேர்வு விடுமுறைக்கு ஆத்தா வீட்டுக்கு கிளம்பும் போது நான் தான் அடம் பிடித்து டேப்பை எடுத்து வந்தேன்.
சின்ன வயதில் இருந்து விடுமுறைக்கு ஆத்தா வீட்டுக்கு வருவதற்கு ஆண்டு முழுவதும் காத்திருப்போம். நாங்கள் வசிக்கும் மலைப் பிரதேசத்தில் இருந்து முற்றிலும் மாறுபட்ட பாரதிராஜா கிராமமான கூடலூருக்கு ஏங்கி இருப்போம். அது மட்டுமல்ல ஆத்தாவின் பெட்டிக்கடை கூடுதல் காரணம். நமக்கே நமக்கென்று ஒரு பெட்டிக்கடை அது நிறைய தின்பண்டங்கள். தேன் மிட்டாய், குழல் அப்பளம், இன்னும் கூடலூரின் பிரத்தியேகக் கண்டு பிடிப்பான காசு மிட்டாய். காசு மிட்டாய் என்பது கம்பர்கட் மாதிரியான மிட்டாய்க்குள் காசு மறைந்திருக்கும். 5 பைசா, 10 பைசா, அதிகப் பட்சமாக 25 பைசா வரை உள்ளே இருக்கும். எல்லா மிட்டாயிலும் இருக்காது. லாட்டரி மாதிரி ஏதாவது ஒன்றில் இருக்கும். யாளி மார்க் கலர்கள். குண்டு அடைத்த பாட்டில்கள். ஆரஞ்சு, க்ரேப்ஸ், ஜிஞ்சர், சோடா. நாங்கள் குடித்தது போகத் தான் விற்பனைக்கு. தெருவில் எல்லோரும் என்னையும், தம்பியையும் கடைக்காரி பேரன்னு கூப்பிடுவார்கள்.
ஆத்தா மட்டுமல்ல அமத்தாவும் (அம்மாவைப் பெற்ற பாட்டி) பெட்டிக்கடை தான் வைத்து இருந்தது. பள்ளிக்கூடத்திற்கு எதிரில் கடை. அங்கும் எங்கள் ராஜ்ஜியம் தான். முந்திரி பழம் (திராட்சை), மற்றும் காரம் போட்ட முந்திரி அங்கே ஸ்பெஷல். ஜெமினியின் சாயலில் இருப்பார் சீய்யான் (தாத்தா). மில்டரி ரிட்டன். பாசமான மனிதன். அவர் கல்லாவில் இருந்தால் கட்டாயம் காசு கொடுப்பார். ஆனால் அமத்தா கொஞ்சம் வினயமான ஆள்.
அப்பாவிற்கு அமத்தா வீட்டிற்குப் போவது பிடிக்காது. விவரம் தெரிந்து நாங்கள் ஒரு நாள் கூட அமத்தா வீட்டில் தங்கியதே கிடையாது. அம்மாவோடு அங்கு போவோம் ஆனால் தங்கியது இல்லை.
இன்னும் கூடலூரில் எங்களை வசீகரிக்கும் வடக் கொட்டரை, தெக்கொட்டரை. வடக்கே இருக்கும் தியேட்டர் வடக்கொட்டரை. முருகா நீ வரவேண்டும் பாடல் ஊராரை அழைக்கும். மற்ற பாடல்கள் பாடி முடித்து படம் போடுவதற்கு முன் இறுதி அழைப்பாக நாதஸ்வர இசை முழங்கும். அதை கொம்பு ரெக்கார்ட் என்பார்கள். மாற்றி மாற்றி படம் பார்ப்போம்.
கூடலூரில் நாலைந்து ரெக்கார்டிங் சென்டர்கள் இருக்கிறது. பல்லவி ரெக்கார்டிங் சென்டரில் எல்லாப் பாடல்களூம் கிடைக்கும். தெளிவான பதிவாகவும் இருக்கும். சென்ற முறை பதிவு செய்து போன கேசட்டைக் கேட்டு நண்பர்கள் அசந்து போனார்கள். மோகனின் புதிய பாடல்களுக்கு ஒன்று, B.P சீனிவாசன் பாடல்களுக்கென்று ஒன்று என 2 புதிய கேசட்டுகளோடு வந்திருந்தேன். மலங்காட்டில் கேசட்டில் பாடல் பதிய பெரும் பாடு பட வேண்டும். பஸ்ஸில் போய் வால்பாறையில் தான் கொடுக்க வேண்டும். புது பாட்டு மட்டும் தான் கிடைக்கும். அதுவும் உடனே கிடைக்காது.
எல்லாத்துக்கும் மேலாக ஆத்தா. ஆத்தாவின் அன்பு. அங்கே அம்மாவை தான் ஆத்தா என்பார்கள். ஆனால் அப்பத்தா என்று நாங்கள் அழைக்க வேண்டிய அப்பாவின் அம்மாவை நாங்கள் ஆத்தா என்று தான் கூப்பிடுவோம். சிறுவயதில் இருந்து அப்படித் தான். தாய்க்கும் மேல் பாசம் காட்டும் ஆத்தாவை அப்படி கூப்பிட்டது சரி தான் என்று இப்பவும் தோன்றும். வருடமெல்லாம் தன்னந் தனியாக இருக்கும் ஆத்தா, வருடமெல்லாம் சேர்த்து வைத்த ஆசையை அன்பை காத்திருந்து கொட்டித் தீர்க்கும்.
ஆத்தாவிற்கு சின்ன வயதில் இருந்தே தனிமை தான். அப்பா மட்டும் தான் பிள்ளை. அப்பா வயிற்றில் இருக்கும் போதே சீய்யான் (தாத்தா) இறந்து விட்டாராம். கூலி வேலைக்குப் போய் அப்பாவைக் காப்பாற்றி இருக்கிறது. 12 வயதிலேயே அம்மாவின் கஷ்டத்தைத் தீர்க்க வெளியூருக்கு வேலை தேடிப் போன ஒருவருடன் கிளம்பிப் போய்விட்டார் அப்பா. அப்போது துவங்கிய தனிமை. நவமலையில் பவர்ஹவுஸ் கட்டும் போது எடுபிடி வேலைக்குச் சேர்ந்து டெம்பரவரி லேபராகி பின் மின்வாரியத்தில் சேர்ந்தது வரையான கதைகளை கண்கள் கசிய அப்பா அடிக்கடி சொல்வார்.
அப்பாவிற்கு கல்யாணம் ஆவற்கு முன் சில ஆண்டுகள், அப்புறம் சில ஆண்டுகள் அப்பாவின் கூட இருந்திருக்கிறது. சொந்த ஊரில் வீடு வாங்கிய உடன் ஆத்தா வீட்டுக்கு காவலாய் வந்து விட்டது. வாழ ஏதாவது பிடித்தம் வேண்டும் எனப் பெட்டிக் கடை.
ஆத்தாவை எல்லோருக்கும் பிடிக்கும். மனசின் நல்ல தனத்தை சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கும் சாந்த முகம். பார்த்தால் சின்னப் பிள்ளை போல தோன்றும் குட்டையான பூஞ்சையான உடல் வாகு. தண்டட்டி இல்லாது வெறுமனே வளர்ந்து தொங்கும் காதுகள். சிறுமியாய் இருக்கும் அக்காவை ஆத்தா மடியில் தூக்கி வைத்தபடி இருக்கும் பழைய போட்டோவில் தண்டட்டி இருக்கிறது. இடையில் எப்போது அது கழற்றப் பட்டது பின் ஏன் மீண்டும் போடவில்லை என்பது கேட்கப் படாது விட்டுப் போன கதைகள்.
யாரவது ஒரு கிழவி எப்போதும் கடையில் உட்கார்ந்து கொண்டு ‘ஏலா சின்னத்தாயி’ என்று உரிமையோடு கூப்பிட்டு கதை பேசிக் கொண்டிருக்கும். அக்கம் பக்கத்து வீட்டுச் சண்டைகள் ஆத்தாவிடம் பஞ்சாயத்திற்கு வரும். ஆத்தாவின் நியாயமான தீர்ப்பு ஏற்றுக் கொள்ளப் படும். சென்றமுறை வந்திருந்த போது வீட்டுச் சண்டையில் பக்கத்து வீட்டு பொன்னமாப்பத்தா அரளி விதையை சாப்பிடப் போன போது ஆத்தா தான் போய் மறித்து பிடிங்கி வந்தது. அப்போது தான் முதன் முதலாய் அரளி விதையைப் பார்த்தேன். ஊரில் அன்றாடம் அரளி விதைச் சாவுகள் நடந்த படி தான் இருக்கும். எங்கும் வளர்ந்து கிடக்கும் செலவில்லாத கொடிய விஷம்.
கடைக்கு வரும் அத்தனை பேருக்கும் தான் கேசட்டில் பேசியதை போட்டுக் காட்டியது. பெருசுகள் வாய் பிளந்து கேட்டார்கள்.
விடுமுறை எப்போதும் போல சந்தோசமாக கழிந்து கொண்டிருந்தது. நானும் தம்பியும் வாடகைக்கு சைக்கிள் எடுத்து ஓட்டிப் பழகிக் கொண்டிருந்தோம்.
அன்றைக்கு காலையில் சண்டை போடும் சத்தம் கேட்டு தான் கண் விழித்தோம். அப்பா கோபமாய் கிளம்பிப் போனார். அம்மாவிடம் ஆத்தா ஏதோ பேச மாமியாருக்கும் மருமகளுக்கும் வாய்ச் சண்டை துவங்கியது. அம்மாவும் கோபித்துக் கிளம்பியது.
அமத்தா வீட்டில் சுருளியில் குல தெய்வத்திற்கு சாமி கும்பிடுகிறார்கள் போகலாம் என்று அம்மா கேட்டிருக்கிறது. அப்பா வர மறுத்திருக்கிறார். சண்டை துவங்கி இருக்கிறது. அவன் வராட்டி விடும்மா நம்ம போகலாம் என்று ஆத்தா சொல்ல, எல்லாம் உன்னாலே தான் என்று அம்மா ஆத்தாவிடம் சண்டை போட்டிருக்கிறது. பதிலுக்கு ஆத்தா பேச பெரும் சண்டையாகி விட்டது.
ஆத்தா கொஞ்ச நேரம் அழுது கொண்டிருந்தது. அப்புறம் நான், தம்பி, ஆத்தா மூவரும் கிளம்பி சுருளி போனோம். சுருளி அருவியின் கீழ் உள்ள கோவில் திருவிழா கோலம் கொண்டிருந்தது. அதைச் சுற்றிய காட்டுப் பகுதியில் கூட்டம் கூட்டமாய் கெடா வெட்டு, சேவல் வெட்டு நடந்து கொண்டிருந்தது. தற்காலிக கல் அடுப்புகளில் பெரிய பெரிய வட்டகைகளில் சோறு, குழம்பு, வெந்து கொண்டிருந்தது. அங்கங்கே வைக்கோல் பரப்பி அதன் மேல் வெள்ளை வேட்டி விரித்து சோற்றை ஆற வைத்திருந்தார்கள். பல இடங்களில் விருந்து துவங்கி இருந்தது.
அமத்தாவை கண்டுபிடித்தோம். கண்டும் காணாமல் இருந்தது. அம்மாவும் அப்படியே. சீய்யான் தான் முகம் மலர்ந்தார். சோறு, குழம்பு அடுப்பில் இருந்தது. காத்திருந்து பேருக்கு சாப்பிட்டு விட்டு கிளம்பினோம்.
பஸ் ஸ்டேன்டிலேயே தம்பியையும் ஆத்தாவையும் அனுப்பி விட்டு பதியக் கொடுத்த கேசட்டை வாங்கப் போய் விட்டேன்.
திரும்ப வரும் போது ஆத்தா மட்டும் கடையைத் திறந்து வைத்து உட்கார்ந்திருந்தது. வந்ததும் கேசட்டை போட்டுவிட்டேன். ‘கூட்டத்திலே கோவில் புறா’ பாடியது. பதிவு துல்லியமாய் இருந்தது.
ஆத்தாவிடம் தம்பி எங்கே என்று கேட்டேன். பக்கத்து தெருவில் அக்கா வீட்டுக்குப் போனதாகச் சொன்னது. ஆத்தாவிற்கு அழுது கண்கள் வீங்கிக் கிடந்தது. என்ன ஆத்தா என்று கேட்க ஒன்றும் இல்லை என்றது. காலையில் போன அப்பா இன்னும் வரவில்லை. எங்கே போனார் என்று தெரியவில்லை. ஆத்தா நினைத்து நினைத்து அழுதது. எனக்கு ஒன்றும் புரியவில்லை. அழுத படியே அவ்வப் போது நாங்கள் ஊருக்கு வரும் போது ஆத்தாவுக்கென்று வாங்கிய இனிப்பை சாப்பிட்டுக் கொண்டிருந்தது.
கேசட் ஒரு பக்கம் பாடி முடித்தது. மறுபுறம் மாற்ற எந்திரிக்கும் போது அமத்தாவும், அம்மாவும் ஆவேசமாய் சத்தம் போட்டுக் கொண்டே வீட்டுக்குள் நுழைந்தார்கள். ‘அடியே சின்னத் தாயி வெளியில வாளா இவளே, ரெண்டுல ஒண்ண பாத்துப்புடுறேன்.’ என்று அம்மத்தா கத்தியது.
ஆத்தாவுக்கு முன்னால் நான் போனேன். கோபமாய் வந்தது. ‘ ஒழுங்கா வெளில போயிரு. எங்க ஆத்தாவை எதுக்குத் திட்டுற’ என்றேன். ‘போடா இவனே’ என்ற படி ரூமுக்குள் வர முயற்சி செய்த அமத்தாவை தள்ளி விட்டேன். அம்மா அடிக்க வந்தது. கையைப் பிடித்துக் கொண்டேன். அப்புறம் வெளியே தள்ளி விட்டேன்.
‘கேக்க யாரும் இல்லைன்னா நினைச்சே, வாடி வெளில’ அமத்தா கத்தியது. ஆத்தா வெளியே வந்தது. கலங்கிய கண்களுடன் அமைதியாய் நின்றது. ‘நீ உள்ள போ ஆத்தா நான் பாத்துக்கிறேன்’னு சொன்னேன். ஆத்தா அப்படியே நின்றது.
அமத்தா வாய்க்கு வந்ததையெல்லாம் பேசியது. ஆவேசமாய் கத்தியது. ஆத்தாவிற்கும் அமத்தாவிற்கும் நடுவில் நான் நின்றேன். ‘ நீ இருக்கிற வரைக்கும் எம் புள்ளய நிம்மதியா வாழ விடமாட்டளா ‘ என்றது அமத்தா. ஆத்தா ஆவேசம் வந்து கத்தியது ‘அதுக்குத் தான் அரளி வெதைய தின்னுக்கிட்டு இருக்கேன், நீங்க நல்லா இருங்க ‘ என்ற படி அரளி விதை ஒன்றை எல்லோரும் காணும் படி வாயில் போட்டது.
நான் ஓடிப் போய் ஆத்தாவின் வாயிக்குள் இருப்பதை எடுக்க முயற்சி செய்தேன். ஆத்தா வெறி வந்தது போல் பல்லைக் கடித்துக் கொண்டு வாயைத் திறக்கவில்லை. அம்மாவும், அமத்தாவும் ஓடியே போனார்கள்.
அக்கம் பக்கதில் இருப்பவர்களெல்லாம் ஓடி வந்தார்கள். நான் கதறிய கதறலைப் பார்த்து ஆத்தா வாய் திறந்தது. அரளி விதையை எடுத்து வீசி எறிந்தேன். தெருப் பெண்கள் ஓடி வந்து ஆத்தாவை தாங்கி கொண்டார்கள்.
பக்கத்து வீட்டில் சைக்கிளை வாங்கிக் கொண்டு டாக்டரை கூப்பிட ஓடினேன். கண்ணீர் வழிந்து கொண்டே இருந்ததால் பாதையே மங்கலகாத் தெரிந்தது.
வகாப் டாக்டாரின் அறைக்குள் ஓடினேன். அவர் யாருக்கோ வைத்தியம் பார்த்துக் கொண்டிருந்தது. அழுகையும் கதறலுமாய் சொல்லி முடித்தேன். ‘சீக்கிரம் போ பின்னாலயே வரேன்னு சொன்னார்.
வீட்டுக்குள் நுழையும் போது அப்பா, தம்பி, அக்கா வந்திருந்தார்கள். தெருவே கூடி இருந்தது. சோப்புத் தண்ணியை ஒரு பாத்திரத்தில் வைத்துக்கொண்டு ஆத்தாவை குடிக்கச் சொல்லிக் கொண்டிருந்தார்கள். ஆத்தா பிடிவாதமாய் மறுத்து கொண்டு இருந்தது.
‘ஆத்தா நீ குடிக்கிறயா நான் குடிக்கட்டுமா?’ என்ற படி சோப்புத் தண்ணியை சொம்பில் எடுத்துக் குடிக்கப் போனேன். ஆத்தா குடிக்கிறேன் என்று வாங்கிக் குடிக்கத் துவங்கியது.
வகாப் டாக்டர் வந்து விட்டார். ‘ என்ன ஆத்தா இப்பிடி பண்ணிட்டே’ என்ற படி பக்கதில் போனார். மற்றவர்கள் வழி விட்டார்கள். நாடி பார்த்தார். நாக்கை நீட்டச் சொல்லிப் பார்த்தார். ஸ்டெதஸ்கோப்பை நெஞ்சில் வைத்து சோதித்தார்.
கீழே இறங்கி வந்து அப்பாவிடம் ‘ஒன்னுமே பண்ண முடியாது. ரெம்ப நேரம் ஆகிருச்சு. இன்னும் 5 நிமிசம் தான்’. என்று சொல்லும் போதே அவருக்கும் கண்ணீர் வந்து விட்டது. கூச்சல் பெரிதாகியது.
அப்பா, அக்கா,நான், தம்பி, எல்லோரும் கதறினோம். ஆத்தா உயிரோடிருக்கும் கணங்களை பதிவு செய்ய விரும்பியது போல ஆத்தாவையே பார்த்துக் கொண்டிருந்தோம். ஆத்தாவின் கண்களில் கண்ணீர் வழிந்தது. எங்களையே உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தது. வாயில் இன்னதென்று தெரியாமல் ஏதோ சொன்னது. மெல்ல மெல்ல எங்கள் மடியிலேயே உயிரடங்கியது. தன்னிலை மறந்து வெடித்துக் கதறினோம்.
என் வாழ்வில் நெருங்கிய உறவுக்குள் நிகழ்ந்த முதல் மரணம் அது.
பந்தல் கட்டி, பறை அடித்து, சங்கு ஊதிக் கொண்டு இருந்தார்கள். தேர் தயாராகிக் கொண்டு இருந்தது. நாற்காலியில் உட்கார வைத்திருந்தார்கள் ஆத்தாவை . அமர்ந்து கொண்டு தூங்குவது போலவே இருந்தது.
ஓப்பாரியிட்டு கதறிக் கொண்டிருந்தார்கள். மாலைகள் குவிந்து கிடந்தது.
அழுதழுது மயக்கம் வந்த என்னை அப்பாவின் பக்கத்தில் சேரில் உக்கார வைத்து சோடா கொடுத்தார்கள். அனிச்சை செயலாய் கண்ணீர் வழிந்து கொண்டிருந்தது. அப்பா மெதுவாகக் கேட்டார் ‘ ஆத்தா பேசுனதை பதிவு பண்ணுனையே பத்திரமா இருக்கா?’
‘ இல்லப்பா அத அழிச்சு பாட்டு பதிவு பண்ணிட்டேன்’ என்றேன் குற்ற உணர்வுடன்.
அப்பா தலையில் அடித்துக் கொண்டு மீண்டும் பெரும் குரலில் தேம்பத் தொடங்கினார்.
பிப்ரவரி 22, 2007 at 9:32 முப
க்ளைமாக்ஸ் நெருங்க நெருங்க ஒரு நல்ல சிறுகதைத்தனம் தென்பட்டு அப்படியே முடிந்தது. பாட்டியுடனான உன்னத அனுபவங்கள் எல்லாருக்கும் இருக்கும். அது இதில் அழகாய் வெளிப்பட்டிருக்கிறது. மிக நன்று.
ஜூலை 23, 2007 at 8:25 முப
padiththean….. azudhean……