குரல் காதில் விழுவதற்கு முதல் நொடியில் கூட பேசுவது
அமுதாவாக இருக்கும் என்று நினைக்கவில்லை. ஹலோ’
என்ற ஒரே வார்த்தையில் கண்டு பிடித்துவிட்டேன். சென்னைக்கு
வந்து இரண்டு ஆண்டுகளுக்கு மேல் ஆகியும் நான் கல்யாணத்திற்கு
வரவில்லை என்ற கோபத்தில் தொலைபேசி எண், முகவரி எல்லாம்
இருந்தும் வைராக்கியமாய் அவள் தொடர்பு கொள்ளவே இல்லை.

தினந்தோறும் எதிர்ப்படும் முகங்களில் அவள் இருந்து விடமாட்டாளா எங்காவது துணிக்கடையில் துணி வாங்கிக் கொண்டிருக்கும் போதோ, மார்கெட்டில் இருந்து காய்கறி பையை சுமந்தபடி வந்து கொண்டிருக்கும் போதோ அவளைப் பார்த்து விடமாட்டேனா என்று அவ்வப்போது தோன்றும்.

நானிருக்கும் சைதாப்பேட்டையில் இருந்து வண்டியில் போனால்
பத்து நிமிடம் கூடப் பிடிகாத தி நகரில் கோபால் தெருவில்
இரண்டு வருடங்கள் வாழ்ந்திருக்கிறாள்.ஆண் குழந்தை பிறந்திருப்பதாகச் சொன்னாள்.

உடனேயே அவளைப் பார்க்க வேண்டும் போல இருந்தது. அலுவலகத்தில் வேலை ஏதும் செய்யத் தோன்றாமல் வெறுமனே உட்கார்ந்திருந்தேன்.

நான் நினைத்திருந்தால் அமுதாவின் கல்யாணத்திற்கு போயிருக்க முடியும். ஆனால் போகப் பிடிக்கவில்லை.

ஆறு வருடங்களுக்கு முன்னால் சிபியோடு கோவை காந்திபுரதில்
உள்ள அவனது அலுவலகத்திற்குப் போன போது தான் அமுதாவை
முதன் முதலில் பார்த்தேன். பார்த்தவுடன் பிடித்துப் போவது
மாதிரியான முகம். நிறம் குறைந்திருந்தாலும் ஏதோ ஒரு அம்சம்
அந்த முகத்தின் அழகுக்கு முழுப் பொறுப்பு ஏற்று பொலிவுற வைத்திருந்ததது. அலங்காரங்களின் இரவல் இல்லாத நிஜ அழகு. கவனமான ஆனால் கண்களை உறுத்தாத ஆடைகளின் தேர்வு. மனதிலிருந்து வரும் சிரிப்பு,உள்ளத்தில் இருந்து வரும் வார்த்தைகள். அடர்ந்த வனத்திற்குள் இதுவரை பார்த்திராததும், பெயரறியாததும், மிக அழகானதும் வாசம் நிரம்பியமானதொரு பூவைப் பார்த்தது போல இருந்தது. அந்த சந்திப்பு எனக்கு.

சிபி எனக்கு பால்ய நண்பன். சோலையாரில் மின் வாரியக் குடியிருப்பில் எங்கள் வீட்டுக்கு அடுத்த வீடு சிபியுடையது. எனது முதல் நண்பன் சிபி தான். உறங்கும் நேரம் தவிர ஒன்றாகவே சுற்றுவோம். பத்தாவது படிக்கும் போது அவனின் அப்பாவிற்கு டிரான்ஸர்வந்துவிட்டது.

அதன் பின் வாரத்திற்கு ஒரு கடிதமாவது எழுதிக் கொள்வோம். பின் மாதத்திற்கு ஒரு கடிதம், வருடத்திற்கு ஒரு கடிதம் என்றாகி பின் கடிதங்களே இல்லாத சில வருடங்கள் ஓடிப் போனது.

நண்பனொருவனின் அறையில் தங்கி வேலை தேடும் முடிவோடு கோவைக்கு வந்து ஒரு மாதமாகி இருந்தது. ஒரு நாள் இரவுக் காட்சிக்கு ராகம் தியேட்டரில் டிக்கெட் வாங்க நின்றிருக்கும் போது தான் தற்செயலாய் மீண்டும் சிபியை பார்த்தேன். அவன் தான் முதலில் என்னை கண்டுபிடித்தான்.மீசையும் தாடியும் வந்திருந்தாலும் பெரிய மாறுதல்கள் இல்லாமல் இருந்தது அவன் முகம். கம்பியூட்டர் சயின்ஸ் படித்து முடித்து லோன் வாங்கி, சொந்தமாக விளம்பர டிசைன்கள் செய்து தரும் நிறுவனத்தை சில ஆண்டுகளாக நடத்தி வருவதாய் சொன்னான். மறுநாள் அவனே என்னுடைய ரூமூக்கு வந்து அலுவலகத்திற்குக் கூட்டி வந்தான்.

அதன் பிறகு சிபியின் அலுவலகமே என் முகவரி ஆனது. எப்போதும் அங்கேயே இருப்பேன். தப்பித் தவறி ஒருநாள் போக முடியவில்லை என்றாலும் சிபி தேடி வந்துவிடுவான். அங்குதான் முதன் முதலாய் கம்பியூட்டரைத் தொட்டுப் பார்த்தது.
இன்டர்நெட் என்றால் என்ன, இ மெயில் என்றால் என்ன என்று தெரிந்து கொண்டது. அமுதா தான் சொல்லிக் கொடுத்தாள். அவனது நிறுவனத்தில் நான்கு வருடங்களாக வேலை செய்து கொண்டிருந்தாள் அமுதா. சிபி, அமுதா இன்னும் செந்தில் என்று
மூன்று பேரைக் கொண்ட குட்டி நிறுவனம் அது. செந்தில் மார்கெட்டிங் பார்ப்பதால் எப்போதாவது தான் ஆபிஸில் பார்க்க முடியும். சிபியும் அமுதாவும் டிசைன் செய்வார்கள். முக்கியமான சந்திப்புக்கள், பேங்க் செல்வது , என அடிக்கடி வெளியில் போய் விட்டு இரவில் விழித்து வேலை பார்பான் சிபி.

மதியம் அங்கிருந்தால் எனக்கும், சிபிக்கும் பக்கத்தில் இருக்கும் செட்டிநாடு மெஸ்சில் இருந்து பார்சல் வந்துவிடும். அமுதாவுடன் சேர்ந்து மூன்று பேரும் சாப்பிடுவோம். விதவிதமான உணவு வகைகளோடு வரும் டிபன் பாக்ஸை எங்களுக்கு கொடுத்து
விட்டு பார்சல் சாப்பாட்டுத் தண்டனையை ஏற்றுக் கொள்வாள்.

பெரும்பாலான நேரங்களில் நானும் அமுதாவும் மட்டும் அலுவலகத்தில் இருப்போம். ஒரு சில நாட்களிலேயே நானும் அமுதாவும் நல்ல நண்பர்களாகிவிட்டோம். உரையாடல்களின் போது அவள் வாயை விட காதை அதிகம் பயன் படுத்துபவளாக
இருந்தாள். நான் என்னுடைய நேற்றைய நிகழ்வுகளையும், நாளைய
கனவுகளையும் கொட்டித் தீர்ப்பேன். எதைச் சொன்னாலும்
அக்கறையோடு கேட்பாள். சிபியின் சின்ன வயது சம்பவங்களை
ஆர்வத்துடன் கேட்பாள். பால்ய காலத்தில் அவன் குறும்பு
செய்வானா, நன்றாகப் படிப்பானா அவன் யாரையாவது
காதலித்தானா? என்று அவனது வாழ்க்கைச்சரித்திரத்தை எழுதப்
போவதுபோலக் கேட்பாள். சிபியைப் பற்றிய பேச்சு துவங்கிவிட்டால்
அவளுக்கு வேலை கூட இராண்டாம் பட்சம் தான். அவனைப் பற்றிய
பேச்சு அவளைக் கனவில் ஆழ்த்தி விடும், கண்கள் நிலை குத்தி
நிற்கும். சொல்வதையெல்லாம் இறந்த காலத்திற்குள் இறங்கிச்
சென்று பார்த்துக் கொண்டு இருக்கிறாளோ என சந்தேகம் வரும்.

எனக்கு ஏதோ புரிந்த மாதிரி இருந்தது. ஒரு கோடி ரூபாய் கொடுத்தாலும் கிடைக்காத சந்தோசம் அவனது பேரை உச்சரிப்பதில் அவளுக்கு கிடைத்ததைக் கவனித்தேன். அவன் பார்க்காத போது
அவனை அள்ளி விழுங்குவது போல பார்ப்பதும், சிறப்பாய் படிக்கும்
ஒரு மாணவி ஆசிரியர் பாடம் நடத்தும் போது கவனமாய் கேட்பது
போல அவன் பேசும் வார்த்தைகளை மனப் பாடம் செய்வதும்,
எனக்கு வித்தியாசமாய் தெரிந்தது. ஒரு முறை சிபிக்கு பிறந்தநாள்
வாழ்த்துச் சொல்லி பரிசொன்றை கொடுத்தாள். அதன் பிறகு தான்
அன்றைக்கு பிறந்தநாள் என்பதே அவனுக்கு நினைவில் வந்தது.
அவன் ஆச்சரியத்தோடு ‘எப்பிடி’ என்று கேட்க ‘தெரியும்’ என்பது
மட்டும் அவளது பதிலாக இருந்தது. கேக் வாங்கக் கிளம்பிய போது
‘அமுதாவிற்கு நல்ல ஞாபக சக்தி ‘என்றான். நாம் விரும்பி
நேசிக்கிற அக்கறை உள்ள சில விசயங்கள்எப்போதும் மறக்காது
என்று அவனுக்குசொல்ல நினைத்தேன்.

எல்லாம் கவனித்து ஒருமுறை தனித்து இருக்கும் போது
அமுதாவிடம் ‘ நீங்க சிபியை விரும்புறீங்களா அமுதான்னு’
கேட்டேன். அவள் அதிர்ந்து போனாள். சிறிது நேரம்
மெளனமாய் இருந்து விட்டு, ‘ஆமா லவ் பண்ணுரேன்’னு
சொன்னாள். அவனுக்குத் தெரியுமா என்று கேட்க
பதட்டப்பட்டவளாக ‘ சொல்லல பயமா இருக்கு, ஒரு வேளை
வேணான்னு சொல்லிட்டா என்னால தாங்கிக்க முடியும்னு
தோணல, ஆனா சிபி எனக்குத் தான். என்னோட முருகன் என்ன
கைவிட மாட்டான் ‘ என்றாள். அவனிடம் வாய்ப்பு இருக்கும்
போது பேசி அவன் மனசில் என்ன இருக்குன்னு தெரிஞ்சுக்கணும்
என்று நினைத்துக் கொண்டேன். என் மனசைப் படித்தவளைப் போல
தயவு செஞ்சு எனக்கு உதவி பண்ணுறேன்னு நீங்க சொல்லிராதீங்க
ப்ளீஸ். எனக்கு தைரியம் வரும் போது நானே சொல்லிக்குறேன்.’
என்றாள்.

ஒரு பெண்ணின் காதல் எத்தனை உணர்வுப் பூர்வமானது என்பதை
அமுதாவிடம் தான் தெரிந்து கொண்டேன். சிபியின் அசைவுகளை
வைத்தே அவனது மனநிலையை துல்லியமாய் கணிக்க அவளால்
முடிந்தது. அவனது சட்டையை இதற்கு முன்னால் எப்போது
அணிந்தான் என்பதை சரியாகச் சொன்னாள். யாருக்கும் தெரியாமல்
அவனது இருக்கையை துடைத்து வைப்பதை ஒருநாள் கண்டு
பிடித்தேன். அவனுக்கு பிடித்த உணவு, நிறம், நடிகர், நடிகை,
எல்லாவற்றையும் தெரிந்து வைத்திருந்தாள். அவளது சிந்தை செயல்
எல்லாமே சிபி தான்.

சிபி அமுதாவிடம் நன்றாகப் பழகுகிறான், அவள் மீது மதிப்பு
வைத்திருக்கிறான் என்பது எனக்குத் தெரியும் ஆனால் அவனுக்கு
காதல் இருக்கிறதா என்பதைக் கண்டு பிடிக்க முடியவில்லை. ஒரு
முறை வீட்டில் இருந்து அவசரமாக அழைப்பு வந்ததும் ஊருக்கு
கிளம்பினான். ஊரில் இருந்து பெண் பார்க்கப் போவதாக போன்
செய்தான். எனக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. அவன்
வந்ததும் அவனுக்கு அமுதாவின் காதலைத் தெரியப்படுத்தி
விடுவதென்று தீர்மானித்தேன். ஆனால் சிபி வரும் போதே
நிச்சயதார்த்தம் முடித்து கல்யாண நாளைக் குறித்து முடித்து
விட்டு வந்திருந்தான்.

அமுதா இதை எப்படி எதிர்கொள்ளப் போகிறாள் என்பது எனக்கு
கவலையாக இருந்தது. நான் தான் தயங்கிய படி விசயத்தைச்
சொன்னேன். நம்பாமல் சிரித்தாள் பிறகு என் குரலில் இருந்த
வருத்தத்தையும் உண்மையையும் உடனே புரிந்து கொண்டாள்.
மரண சேதியை கேட்டது போல அதிர்ந்து போனாள். வெடித்து
அழுதாள். அப்படி ஒரு அழுகை. வாழ்வில் எல்லாற்றையும்
இழந்துபோய் நிற்கும் ஒரு ஜீவனை போல இருந்தது
அவளின் நிலை.

எதிர்பாராத அதிர்ச்சி அவளை நிலை குலைய வைத்து விட்டது.
மணிக் கணக்கில் அழுதாள். ஒரு வேளை அமுதா தன் காதலை
சிபியிடம் சொல்லி இருந்தால் இப்படி நடக்காமல்
இருந்திருக்கலாம். நாளையின் மீதுள்ள நம்பிக்கையில் இன்றைய
கணங்களை அலட்சியப் படுத்தி விடுகிறோம். உலகின் அத்தனை
கதைகளையும் விட திருப்பங்கள் நிறைந்தது வாழ்வென்பதை பல
முறை மறந்தே போகிறோம். அழுது முடித்து எழுந்து போய் முகம்
கழுவி வந்தவளஉடனே வீட்டிற்கு கிளம்பினாள். என்ன
நினைத்தாளோ ‘ இப்பிடி ஒருவிசயம் இருந்ததுங்கறதே சிபிக்கு
என்னைக்கும் தெரிஞ்சிரக் கூடாது. என்னைக்குமே சொல்லிறாதீங்க ‘
என்று சொல்லி என்னையே பார்த்தாள். கலங்கிய கண்களொடு
சம்மதமாய் தலை அசைத்தேன். மீண்டும் துவங்கிய அழுகையோடு
கிளம்பினாள்.

சில நாள் விடுமுறைக்குப் பின் வந்தாள். எப்போதும் போலவே
இருந்தாள். சிபியின் கல்யாணத்தில் ஈடுபாட்டோடு வேலை
பார்த்தாள். அவனது மனைவியிடம் அதற்குள் பேசிப் பழகி அவள்
எதற்கெடுத்தாலும் அமுதா அமுதாவென்று அழைக்கும் படியாய்
தோழியாகிப் போனாள். எனக்கு எல்லாம் ஆச்சரியமாக இருந்தது.
அதே வேளையில் சந்தோசமாகவும் இருந்தது.

அதன் பிறகு சென்னைக்கு வந்து சேர்ந்தேன். நல்ல நல்ல
இடங்களில் இருந்து எத்தனையோ மாப்பிள்ளைகள் வந்தும்
வீம்பாய் மறுத்து விட்டாள். யார் யாரோ என்னென்னவோ
சொல்லிப் பார்த்தும் முடியவில்லை. என்னிடம் போனில் பேசும்
போது சிபியை மறக்க முடியவில்லை என்றாள். நான் ஏதோ
சொல்லத் துவங்கும் முன் அட்வைஸ் பண்ணுனா பேசவே
மாட்டேன் தயவு செஞ்சு புரிஞ்சுக்கோ என்றாள். சிபியிடம் நீ
சொன்னா கேப்பா என்று நான் சொல்ல அவனும் சொல்லிப்
பார்த்திருக்கிறான்.

மூன்று வருடங்கள் பிடிவாதமாய் இருந்தவள் நேரில் கூட
பார்க்காமல் புகைப்படத்தைப் பார்த்து கல்யாணத்திற்கு சம்மதித்ததில்
அனைவருக்கும் ஆச்சரியம். இத்தனைக்கும் மாப்பிள்ளைக்கு பெரிய
படிப்பு இல்லை. ஏதோ தனியார் நிறுவனதில் கிளர்க் வேலை,
சொல்லிக் கொள்ளும் படியான சம்பளமில்லை. அமுதா தான் இந்த
கல்யாணத்தில் உறுதியாய் இருந்திருக்கிறாள். பின் சென்னை வந்து
இரண்டு வருடங்கள் கடந்து இப்போது நினைவு வந்திருக்கிறது.

எனக்கு அவளை, அவள் வாழும் வாழ்வைப் பார்க்க ஆவலாய்
இருந்தது. அலுவலகத்தில் இருந்து சீக்கிரமாய் கிளம்பிவிட்டேன்.
என் மனைவியை அழைத்துப் போய் சரவணாவில் குழந்தைக்கு
துணியும் , சில விளையாட்டுப் பொருள்களும் வாங்கிக்
கொண்டேன். தியேட்டரில் படம் போட இன்னும் நிமிடங்களே
இருக்கிறதென்று பரபரப்போடு வண்டி ஓட்டும் ஒருவனின்
மனநிலையில் இருந்தேன். என் மனைவியிடம் பல முறை
அமுதாவைப் பற்றி சொல்லிருந்ததால் அவளும் ஆர்வமுடன்
இருந்தாள்.

கோபால் தெருவில் அவள் சொன்ன வீட்டின் முன்னால்
நிற்கும் போது வாரத்திற்கு இரண்டு தடவையாவது இந்த
தெரு வழியே போவேன் எப்படி கண்ணில் படாமல் போனாள்
என்று ஆச்சரியமாக இருந்தது. வாழ்வதற்காக இல்லாமல்
வாடகைக்காக கட்டப் படும் வீடுகளில் ஒன்றாக இருந்தது
அது. கீழே மூன்றும் மேலே மூன்றுமாக தீப்பெட்டி போன்ற
அறைகள். மாடியில் மூன்றாவது வீடு அவளுடையது. காலடி
சத்தத்தை கேட்டதும் வெளியே வந்தாள். அமுதாவிற்கு
கல்யாணமானவர்களுக்கே உண்டான சதைப் பிடிப்பான முகமும்
உடலும் வந்து விட்டிருந்தது. முகம் மலர்ந்து போனது எங்களைப்
பார்த்தும். என் மனைவியின் கைகளைப் பிடித்துக் கொண்டாள். வா
என்றாள் என்னை உரிமையோடு.

முன் அறையில் அமர வைத்து விட்டு உள்ளே சென்று
தண்ணீர் கொண்டு வந்து கொடுத்தாள். உள்ளே
சமையல் அறை. முன்புறம் வரவேற்பறை, உறங்கும்
அறை, உண்ணும் அறை, என எல்லாமாகிய ஒரு அறை.
அறை சிறியது என்றாலும் அதை சுத்தமாகவும்
நேர்த்தியாகவும் வைத்திருந்தாள் அமுதா. சப்தம் கேட்டு
குழந்தை சிணுங்கியது. தொட்டிலில் இருந்து குழந்தையை
தூக்கிக் கொண்டு வந்து என்னிடம் கொடுத்தாள். அதனை
வாகாக ஏந்தி கொண்டேன். ‘பரவாயில்ல குழந்தைய நல்லா
தூக்கறீயே’ என்றாள் சிரித்த படி. குழந்தை அழகாக
இருந்ததது. ரெம்பப் பழகியது போல சிரித்தது.

சமையல் அறைக்குப் போய் டீ போட்டு கூடவே
தின் பண்டங்களுமாக வந்து கொடுத்து
விட்டு கீழே உட்கார்ந்து கொண்டாள். எனது வீடு,
வேலை பற்றி எல்லாம் விசாரித்தாள். பார்த்து பல
வருடங்கள் ஆனதால் பேச விசயங்கள் நிறைய மிச்சம்
இருந்தது. நிறைய பேசினோம். என் மனைவி குழந்தையை
கொஞ்சிக் கொண்டு அவ்வப் போது அரட்டையில் கலந்து
கொண்டாள். இத்தனைக்கும் நடுவில் நான் அமுதாவின்
முகத்தையே உற்று பார்த்துக் கொண்டு இருந்தேன். முகத்தில்
கசியும் அவளின் மனசை துழவிக் கொண்டிருந்தேன். அவள்
சந்தோசமாக இருப்பதாகவே பட்டது.

அமுதாவைப் பெண் பார்க்க அரசாங்க வேலையில்
இருப்பவர்கள், இன்ஜினியர்,டாக்டர் என்று எவ்வளோ
மாப்பிள்ளைகள் வந்தார்கள். அமுதா நினைத்திருந்தால்
இன்னும் வசதி உள்ள வாழ்க்கை அமைந்திருக்கும்.
ஆனால் இது போதும் என்ற நிறைவோடு இவள் வாழ
என்ன காரணம் என்பதற்கான பதில் மட்டும்
கிடைக்கவில்லை.

பக்கத்து வீட்டில் சன் செய்தி முடியும் சப்தம் கேட்டது.
அமுதாவின் கணவரை பார்க்க ஆவலோடு இருந்தேன்.
எப்பவும் வந்திருவார், நீங்க வருவீங்கன்னு தெரியும்,
சொல்லிட்டு சீக்கிரம் வரேன்னார் இன்னும் காணமேன்னு
அமுதா சொல்லிக் கொண்டே இருந்தாள்.

‘அக்கா உங்களுக்கு போன்’ என்ற படி பக்கத்து வீட்டு
சிறுவன் வந்து செல்போனை அமுதாவிடம் கொடுத்தான்.
அவளின் கணவன் தான் பேசுகிறார் என்று தெரிந்தது.
அலுவலகத்தில் அவசரவேலை காரணமாக வர முடியவில்லை
தாமதமாகும் என்பதை தான் சொல்கிறார் என்பதை அவள்
பேசுவதை வைத்தே புரிந்து கொள்ள முடிந்ததது. அமுதாவிற்கு
கண்கள் கலங்கி விட்டது. ஏதோ கோபமாக சொல்லி விட்டு
போனை வைத்து விட்டாள்.

‘ரெம்ப முக்கியமான வேலையாம் ஒனர் கூட ஒரு
எடத்துக்கு போகனுமாம். வர லேட்டாகுமாம். ரெம்ப
வருத்தப் பட்டாரு.’ சொல்லும் போதே கண்கள் கலங்கியது
அமுதாவிற்கு.’பரவாயில்ல அவருக்கு என்ன அவசரமோ
ப்ரைவேட் கம்பெனினா அப்பிடித் தான்.’ என்றேன். ‘சன் டே
லீவ் தான அவரையும் கூட்டிட்டு எங்க வீட்டுக்கு வாங்க’
என்றாள் என் மனைவி. சரி என்று தலை அசைத்தாள்.

ஏதோ நினைவுக்கு வந்தவளாக’அட மறந்துட்டேன்’
என்ற படி பீரோவைத் திறந்தாள் அமுதா. என்ன
என்று நானும் என் மனைவியும் ஒருவரை ஒருவர்
பார்த்துக் கொண்டோம். அது கல்யாண ஆல்பம் .
நானும் கேக்கணும்னு நெனச்சேன் பேசிக்கிட்டே
மறந்தாச்சு என்றேன். பெரியதாய் இருந்தது ஆல்பம்.
‘ இதிலயாவது அமுதாவோட வீட்டுக்காரர பாக்கலாம்’
என்றாள் என் மனைவி.

ஆல்பத்தின் முதல் பக்கத்தில் அமுதா மாலை அணிந்து
நின்றிருந்தாள். அவளருகே மாப்பிள்ளை கோலத்தில்
நிற்பவரை பார்த்ததும் அதிர்ந்து போனேன். இன்னும் ஒரு
முறை உற்றுப் பார்த்தேன். நம்ப முடியவில்லை. அப்படியே
அச்சு அசல் சிபி மாதிரியே ஒருவர். சிபியோ என்று கூட ஒரு
கணம் தோன்றியது. திரைப் படத்தில் இரட்டை வேட காட்சியில்
மட்டுமே சாத்தியமாக் கூடிய விஷயம். மிக நுட்பமான
வித்தியாசங்கள் இருந்தது என்றாலும் சிபியை
தெரிந்தவர்களுக்கு அவனே தான் என்று தோன்றும்.

அமுதாவை பார்த்தேன். என் பார்வையை பரிபூரணமாய்
புரிந்து கொண்டு அர்த்தம் நிரம்பிய ஒரு புன்னகை
செய்தாள். அது சாதனை புரிந்தவர்கள் செய்யும் வெற்றிப்
புன்னகையைப் போல இருந்ததது. அதுவரையான அவளைப்
பற்றிய விடை தெரியாத கேள்விகளின் மீது புதிய
வெளிச்சமாய் பெருகியது அந்தப் புன்னகை.