அலுவலுகத்திற்கு தாமதமாகி விட்டதால் வேக வேகமாக நடந்து கொண்டிருக்கும் போது என் பெயரை உரிமையுடன் அழைத்தது ஒரு குரல். குரலின் திசையில் திரும்பும் முன் ஓடி வந்து என் கைகளை பற்றி கொண்டன உறுதியான கரங்கள். பார்த்தால்,முகம் மலர நிற்கிறான் தர்மராஜ்.அவனை பார்த்து எட்டு வருடங்களுக்கு மேல் இருக்கும். மீண்டும் அவனை சந்திப்பேன் என்று கனவிலும் நினைத்ததில்லை.

கோவை அரசுகலைக்கல்லூரி மாணவர் விடுதியில் முதலாண்டில் நான், தர்மராஜ், சுந்தர மூர்த்தி மூவரும் ஒரே அறையில் தங்கிப் படித்தோம். தர்மராஜ் வாட்ட சாட்டமாக இருப்பான். உடற்பயிற்சியில் உருவேற்றிய உறுதியான உடல்.அதற்கு நேர்மாறான குழந்தை மனசு.அவன் நல்ல குரல் வளமுள்ள பாடகனாக இருந்தான். எப்போது பாடச் சொன்னாலும் சிரித்த முகத்துடன் ரசித்து பாடுவான். அவனது விருப்ப பாடல் சங்கராபரணத்தில் உள்ள ‘சங்கரா’ என்ற பாலசுப்ரமணியத்தின் பாடல். அவன் அந்த பாடலை பாடும் போது கண்மூடி கேட்டால் நிஜபாடலைக் கேட்கிறோமோ என்று சந்தேகம் வரும்.

எனக்கும் சுந்தரமூர்த்திக்கும் எப்போதாவது சண்டை வரும் போது தர்மராஜ் தான் சமாதான படுத்துவான். நானும், தர்மராஜும் திரைப் படம் பார்ப்பது ஒரு நாளும் தவறாது. ஒரு முறை நான் அழைத்து போக வேண்டும் மறுமுறை அவன் அழைத்து போக வேண்டும் என்று எழுதப்படாத சட்டம் அமலில் இருந்தது. கல்லூரி நேரம் தவிர ஒன்றாகவே சுத்துவோம். முதல் ஆண்டு முடிந்து கிளம்பும் போது அடுத்த ஆண்டும் ஒரே அறையில் தங்கி கொள்வதாய் முடிவு செய்தோம். யார் முதலில் வருகிறார்களோ அவர்களே நல்லஅறையாக பிடித்து வைக்க வேண்டும் என்ற தீர்மானத்தோடு கிளம்பினோம்.

இரண்டாம் ஆண்டு துவங்கும் போது நானே முதலில் வந்து நல்ல அறையை பிடித்தேன். கல்லூரி துவங்கி ஒரு மாதமாகியும் தர்மராஜ் வரவில்லை. குழப்பமாய் இருந்தது, அவனது முகவரியோ தொலைபேசி எண்ணோ இல்லை. சேலம் பக்கதில் ஏதோ கிராமம் என்பது மட்டும் நினைவில் இருந்தது. என்ன செய்வதென்று தெரியவில்லை. இரண்டு மாதமும் ஆகி விட்டது அறையில் தனியே தங்கி இருந்தேன்.

சுந்தர மூர்த்திதான் ஒருநாள் பதட்டதுடன் வந்து நம்பமுடியாத அந்த செய்தியை சொன்னான். தர்மராஜ் அவனது அண்ணியை அரிவாளால் வெட்டி கொலை செய்து விட்டு சிறையில் இருக்கிறான் என்று, அவனது வகுப்பில் யாரோ செய்தித்தாளில் பார்த்து விட்டு சொன்னதாய் கூறினான். ‘வேற யாரையாவது பார்த்துட்டு சொல்ல போறாங்க’ என்றதற்கு, ‘அவந்தான் காலேஜ் பெயரெல்லாம் போட்டு இருந்ததாம், தலை முதல் கால் வரை வெட்டு இல்லாத இடமே இல்லையாம்’ என்றான்.

மிகப்பெரிய அதிர்ச்சியாய் இருந்தது. அப்படியா கோபம் வரும் மனிதனுக்கு, அப்படி என்ன தான் பிரச்சனையாக இருக்கும் என்று கண்டதை கற்பனை செய்து நிம்மதி இல்லாமல் காலம் ஓடிக் கொண்டிருந்தது.

இராண்டாம் ஆண்டு முடிவதற்கு சில வாரங்களே உள்ள போது, வழக்கம் போல் மதிய உணவு இடைவேளையில் மெஸ்ஸில் சாப்பிட்டு விட்டு வகுப்பிற்கு கிளம்ப உடை மாற்றிக் கொண்டிருந்தேன் அறையின் கதவை யாரோ தட்டினார்கள். கதவைத் திறந்து பார்த்தால் தர்மராஜ் நின்று கொண்டிருந்தான். ஓடி சென்று அவனை அணைத்துக் கொண்டேன், கண் கலங்கினான். என்னடா இப்பிடி பண்ணிட்ட என்றேன் மவுனமாக இருந்தான். ஆள் கொஞ்சம் தளர்ந்து இருந்தான். பெயிலில் வந்திருப்பதாய் சொன்னான். சிறிது நேரத்திற்கு பின், என்னடா நடந்தது என்றேன். தயவு செஞ்சு அத ஞாபகப் பாடுத்தாத என்றான். எல்லாத்தையும் பாக்கணும் போல இருந்துச்சு என்றான் கொஞ்சநேரம் கழித்து.

சுந்தர மூர்த்தியையும் கூட்டி வந்தேன் அவன் குழந்தை போல அழுதான். வகுப்புக்கு போகாமல் மூவரும் அறையிலேயே இருந்தோம். உன் பாட்டை கேட்கணும் போல இருக்குடா என்று சொன்னதும் அதற்காகவே காத்திருந்தது போல பாடத் துவங்கினான். அடுத்து அடுத்து என்று அரை மணிநேரம் பாடினான். அவனது பாரங்களையெல்லாம் பாட்டின் வழியே வெளியேற்றி விடும் உத்வேகத்தில் பாடினான். கடைசியாய் அவனுக்கு பிடித்த ‘சங்கரா’ பாடலோடு முடித்தான். ஓரே உணர்ச்சி பிரவாகமாக இருந்தது, மூவரும் கண் கலங்கி இருந்தோம். மாலையில் மனமின்றி கிளம்பினான். இனி எப்போடா பாக்குறதுன்னு கேட்டேன், தெரியாது என்றான். வழி அனுப்ப வர வேண்டாம் என்றான், விழுங்கி விடுவது போல இருவரையும் பார்த்தான்,’வர்றேன்’ என்று சொன்ன வேகத்தில் விடுவிடுவென நடந்து போனான்.

கல்லூரி முடித்து சென்னைக்கு வந்து ஏழு ஆண்டுகள் ஆகி விட்ட நிலையில் இந்த சந்திப்பு. தர்மராஜுவுடன் அவனது நண்பன் ஒருவனும் இருந்தான். அவனை எனக்கு அறிமுகப்படுத்தி வைத்தான்.பக்கத்து டீக்கடையில் டீ சாப்பிட்டோம். எனக்கு எல்லாமே கனவில் நிகழ்வது போலவே இருந்தது. என்னைப் பற்றி விசாரித்தான். ஏதோ பிஸ்னஸ் செய்வதாக சொன்னான். என் முகவரியை கேட்டான், அவனது முகவரியை சொன்னான். நேரம் கிடைக்கும் போது வருவதாய் சொல்லி,சமயம் கிடைக்கும் போது நீயும் வா என்றான். முக்கியமான வேலை காரணமாக உடனே கிளம்புவதாகச் சொல்லி அவசர அவசரமாக கை குலுக்கிப் பிரிந்தான். ஒரு ஆட்டோவை மறித்து அவனது நண்பனுடன் ஏறி அமர்ந்து கை காட்டிய படியே சென்றான். நான் ஆட்டோ போவதை வெறித்து பார்த்துக் கொண்டிருந்தேன்.

இது நடந்து கிட்டத்தட்ட ஏழு ஆண்டுகள் ஓடி விட்டது என்றாலும் நாலு தெரு தள்ளி இருந்த அவனை காண ஒரு போதும் நான் ஏன் முயற்சிக்கவில்லை, அதே போல்அவன் ஏன் என்னை ஒருமுறை கூட சந்திக்கவில்லை என்ற கேள்வி அவ்வப் போது மனதில் வந்து வந்து செல்லும். இப்போது யோசிக்கும் போது, எல்லாம் மறந்து புதிதாய் வாழ அவன் விரும்பி இருக்கலாம்,என்னை சந்தித்தது அவனது பழைய நினைவுகளை கிளறி துன்புறுத்தி இருக்கலாம். அவனது நண்பர்களுக்கு என் மூலம் அவனைப் பற்றிய உண்மை தெரிந்து விடும் என்று அச்சப்பட்டிருக்கலாம். ஏதோ கோபத்தில் அவன் கொலை செய்திருக்கிறான் அதே கோபம் என் மீதும் எப்போதாவது வந்து விட்டால் என்ற பயம் கூட நான் அவனை பார்ப்பதை தவிர்த்தற்கு மூலமாய் இருந்திருக்குமோ என்று தோன்றுகின்றது.

எப்படியோ என் மனதுக்குள் அவனை பற்றிய நினைவுகள் நான் வாழும் வரை வாழும்.