பட படவென்று கதவு தட்டப் பட்டது, அதிர்ந்து விழித்தேன். இருள் இன்னும் முழுமையாக வெளுத்திருக்கவில்லை. இரவு முழுதும் தூக்கம் வராமல் போராடி இப்போது தான் கண் மூடினேன். கண் எரிந்தது. எழ முயற்சிப்பதற்கு முன் இன்னொரு முறை கதவு தட்டப் பட்டது. தட்டிய கைகளுக்குள்அவசரமான செய்தி ஏதோ இருப்பதை துரித கதியிலான தட்டுதல் உணர்த்தியது.
இத்தனை சப்தத்திலும் ப்ரியா நன்றாக தூங்கிக் கொண்டிருந்தாள். தொட்டிலில் தூங்கிக் கொண்டிருந்த நிலா லேசாக நெளிந்தாள். மெதுவாக தொட்டிலை ஆட்டி விட்டு விரைவாய் கதவைத் திறந்தேன். மருது சாரும், காளியம்மா அக்காவும் நின்றிருந்தார்கள். அவர்கள் நாங்கள் இதற்கு முன் குடியிருந்த வீட்டின் உரிமையாளர்கள். நான்கு வீடு தள்ளி அவர்கள் வீடு இருக்கிறது.
இந்த அதிகாலையில் என்ன அவசரம் என்று விளங்காமல் அவர்களைப் பார்த்தேன். ஏதோ சொல்லத் தயங்கி நிற்பதைப் போல இருந்தது.
‘ என்ன சார், உள்ள வாங்க ?’ என்றதும்.
‘ஒன்னும் பதட்டப் படாதீங்க , காலைல ஊர்லருந்து போன் வந்தது . ப்ரியாவோட அப்பாவுக்கு உடம்பு கொஞ்சம் சரியில்லயாம், குடும்பத்தோட உடனே வரச் சொன்னாங்க சீக்கிரம் கிளம்புங்க ‘
இதைச் சொல்வதற்குள் அவர் பட்ட சிரமும் அவரின் கலங்கிய கண்களும் எனக்கு சந்தேகமாய் இருந்தது.
‘ என்ன சார் ஆச்சு என்ன சொன்னாங்க ‘ கேட்டுக் கொண்டிருக்கும் போதே ப்ரியா எழுந்து வந்து விட்டாள். பேசியதெல்லாம் காதில் விழுந்திருக்கிறது.
‘அப்பாவுக்கு என்ன ஆச்சு ‘ என்றாள்.
‘ சீரியசா இருக்காராம் உடனே வரச் சொன்னாங்க’ சொல்லச் சொல்லவே குரல் உடைந்து போனது மருது சாருக்கு.
‘எதையோ மறைக்கிறீங்க எதுவா இருந்தாலும் சொல்லிருங்க சார்’ என்று அழுது உடைந்து ப்ரியா கேட்டாள்.
‘ மனச தேத்திக்கோ ப்ரியா உங்க அப்பா இறந்து போயிட்டாரு.’ காளியம்மா அக்கா விசயத்தை உடைத்தார்கள்.
பெரும் வீறிடல் கிளம்பியது ப்ரியாவிடமிருந்து.
வாழ்வில் எப்போதும் ஏற்படாத அளவு குற்ற உணர்வு மலையென அழுத்தத் துவங்கியது என் மனதில்.
ப்ரியாவை அவளது அப்பா அம்மாவுக்குத் தெரியாமல் கல்யாணம் செய்து கொண்ட போது கூட கொஞ்சமும் குற்ற உணர்வு வந்ததில்லை.
ப்ரியாவை எப்படி எதிர் கொள்வது என்று தெரியவில்லை.
என் மனிதத்தனம் முழுதும் உருகிக் கரைந்து ப்ரியாவின் முன்னால் ஒரு மிருக உருக்கொண்டு நிற்பதாய் தோன்றியது.
ப்ரியாவுக்கு மட்டுமல்ல நிலாவின் வாழ்விலும் உறுத்தலாகவே இருக்கப் போகிறது இந்த மறைவு.
நாளைய நம்பிக்கையில் நேற்றைக்குச் செய்த பெரும் பிழை மனதை அறுத்தது.
சரி செய்ய முடியாத பெரும் பிழை தான் அது.
பேத்தி பிறந்து ஏழு மாதங்கள் ஆகியும் பார்க்க முடியாமல் போய்விட்டார்.
பார்க்க வந்த வரை பார்க்க விடாமல் திருப்பி அனுப்பி விட்டது என் கோபம்.
ஒரு ஞானியைத் தவிர எந்த மனிதனாக இருந்தாலும் செய்திருக்கக் கூடிய தவறு தான்.
வாழ்வில் அதை இனித் திருத்த முடியாது என்ற போது அது மிகப் பெரும் வலியாய் இதயத்தை அறுக்கத் துவங்கியது.
கோவையில் நண்பர் சபாபதியின் கல்யாணத்தில் தான் ப்ரியாவை முதன் முதலில் பார்த்தேன். ப்ரியாவின் அம்மாவும் சபாபதியும் ஒரே அலுவலகத்தில் தான் வேலை பார்க்கிறார்கள்.
நான் மாப்பிள்ளைத் தோழனாகவும், ப்ரியா மணப் பெண்ணின் தோழியாகவும் இருந்தாள்.கல்யாணம் முடிந்து வீடு திரும்பும் வரை ஒருவரை ஒருவர் கேலி செய்து கொண்டு திரிந்தோம்.
அவளுக்கு நானொரு பட்டப் பெயர் சூட்ட , அவள் எனக்கொரு பெயர் வைக்க கலாட்டாவாக இருந்தது.
மறுநாள் வீடு திரும்பும் போது ப்ரியா முற்றிலும் மாறு பட்ட தோற்றத்துடன் நின்றாள்.
கண்கள் கலங்கி அழுது கொண்டிருந்தாள். இரண்டு நாட்களாய் முகத்தில் இருந்த சந்தோசமும் , சிரிப்பும் பெயருக்குக் கூட தென்படவில்லை.
சீக்கிரம் வரவில்லை என்று வீட்டில் திட்டுவார்கள். யாராவது வந்து விட்டு விட்டுத் திரும்ப வேண்டும் என்றாள்.
எனக்கு ஆச்சரியமாய் இருந்தது வீட்டைப் பற்றிய அவளது பயம்.
காளிதாசன் அண்ணன் கொண்டு போய் விடக் கிளம்பினார்கள். நீயும் வருகிறாயா என்று என்னையும் கூப்பிட உடனே ஒப்புக் கொண்டேன். அவளின் வீட்டையும் , வீட்டினரையும் பார்க்க கிடைத்த வாய்ப்பை இழக்க விரும்பவில்லை.
மாலை ஏழு மணி இருக்கும் ஒண்டிப் புதூரில் இருக்கும் ப்ரியாவின் வீட்டிற்குப் போய் சேரும் போது.
அவளின் அம்மாவை ஏற்கனவே பார்த்திருக்கிறேன்.
ப்ரியாவின் அப்பாவும் என் எதிர்கால மாமனாராகிய ஆறுமுகம் அவர்களைச் சந்தித்த முதல் சந்திப்பு இன்னும் நினைவில் இருக்கிறது.
கட்டையாய் கறுத்த உருவம். மீசை இல்லை. கச்சிதமாய் உடம்பு இருந்ததால் வயசு தெரியாமல் சின்னப் பையன் மாதிரி இருந்தார். வெள்ளை வேட்டி, வெற்றுடம்பில் ஒரு துண்டு.
அவர் வாங்க என்று சொல்லும் போதே எனக்கு போதையே வரும் படியான மதுவாசம் அடித்தது.
அவரது கை குலுக்கும் போது இரும்பு போன்ற பலம் ஆச்சரியமாக இருந்தது.
பேசியதையே மீண்டும் மீண்டும் பேசிய படியே ஒரு மணி நேரம் விடவில்லை.
ஒரு மணி நேரத்திற்குள் ஒரு பாக்கெட் சிச்சருக்கு மேல் காலியாகி இருக்கும்.
கட்டிலில் அமர்ந்த படி ஊதித் தள்ளி வீடே புகை மண்டலமாக இருந்தது.
நான் சினிமாவில் இருப்பதாய் அறிமுகம் ஆனதும் சில பிரபலங்களின் பெயரைச் சொல்லி எனக்கு நண்பர்கள் தான் என்றார்.
வெளியே வந்தும் ரெம்ப நேரத்திற்குப் பிறகும் அவரின் குரல் கேட்டுக் கொண்டிருந்தது காதில்.
ரொம்ப காலத்திற்கு முன் மில் ஒன்றில் வேலை பார்த்திருக்கிறார். விருப்ப ஓய்வு பெற்று, அதில் வந்த பணத்தையெல்லாம் யாரையோ நம்பி கடனாய் கொடுத்து தொலைத்து விட்டார்.
ப்ரியாவின் அம்மாவின் அரசாங்க சம்பளத்தில் குடும்பம் ஓடுகிறது.
அவரே பெருமையாய் பேசும் போது சொன்ன படி 33 ஆண்டுகளாக குடிப்பவர்.
ஒரு நாளைக்கு ரூ 100க்கு (95ம் ஆண்டுக்கான விலையில்) குடித்தாகனும்.
வீட்டில் கேட்கும் போது கறி, கோழி, முட்டை கிடைத்தாக வேண்டும் இல்லை என்றால் என்னவாகும் என்பதற்கு வீட்டில் இன்சிலேசன் டேப் வைத்து ஓட்டப் பட்டிருக்கும் சுவிட்ச் போர்டுகள், ஒடுங்கிக் கிடக்கும் பீரோ போன்றவை உதாரணங்கள்.
இவை அத்தனையும் விட கோவிலில் சிலைக்கு பவ்வியமாய் பூசை செய்யும் பூசாரியைப் போல் ப்ரியாவின் அம்மா தன் கணவனின் எல்லாத் தேவைகளையும் முக்கல் முனகல் ஏதும் இல்லாமல் செய்து கொடுப்பது தான் ஆச்சரியம். அவர்களின் திருமணம் காதல் திருமணமாம். அந்தக் காதல் தானோ என்னவோ?
இதெல்லாம் தெரிந்த பிறகு தான் ப்ரியாவின் மீது காதல் பெருகி வளர்ந்தது.
நான் சென்னையில் இருந்த படியும் அவள் கோவையில் இருந்த படியும் கடிதத்தில் காதலித்துக் கொண்டிருந்தோம்.
இடையில் கோவை வரும் போது சில முறை அவள் வீட்டிற்குப் போய் அவளின் அப்பாவின் போதை புராணத்தை மணிக் கணக்கில் கேட்டுத் திரும்புவேன்.
ஒருமுறை பல மணி நேரம் என்னைப் போகக் கூடாது என்று கிளம்ப விடவே இல்லை. இரவு நேரம் வேறு ஆகிக் கொண்டிருந்தது.என்ன செய்வது என்று விழித்துக் கொண்டிருந்த போது ப்ரியாவின் அம்மா அவர் பார்க்காத போது காகிதத்தில் எழுதப் பட்ட குறிப்பு ஒன்றை கையில் திணித்தார்கள். அதில் ‘ அப்பா என்று சொல்லவும் விட்டு விடுவார் ‘ என்று எழுதி இருந்தது.
பசங்க யாரவது வீட்டிற்கு வந்தால் இது தொடர்ந்து நடக்கிற விசயம் போல என்று நினைத்துக் கொண்டேன்.
பாவம் எங்களின் காதலைப் பற்றி தெரியாமல் பிதற்றி இருக்கிறார் ப்ரியாவின் அம்மா என்று மனதில் நினைத்த படி கூடுதலாய் ஒரு மணி நேரத்தை செலவழித்து கடைசி பேருந்தையும் விட்டு விட்டு நடந்து திரும்பினேன்.
எங்கள் வீட்டில் என் காதல் அங்கீகரிக்கப் பட்டது. ஆனால் வயது கடந்து கொண்டிருப்பதால் உடனே திருமணம் நடத்த வேண்டும் என்று துடித்தார்கள்.
இதற்குள் ப்ரியாவின் வீட்டில் விசயம் தெரிந்து தண்டிக்கப் பட்டாள். வேறு மாப்பிள்ளை பார்க்கும் முயற்சியும் ஆரம்பமானது.
ஆனது ஆகட்டும் என்று என் அப்பா, அம்மா, மாமா, தம்பி அனைவரும் ஒரு வாடகை காரை அமர்த்தி ப்ரியாவின் வீட்டிற்குப் போய் பெண் கேட்டார்கள்.
அவளின் அப்பா ‘பெண்ணைப் படிக்க வைக்கணும் , உங்களுக்கு கொடுக்க முடியாது, அதை மீறி ஏதாவது செஞ்சீங்கன்னா நீங்க தான் காரணம்னு எழுதி வைச்சுட்டு குடும்பத்தோட தற்கொலை செஞ்சுக்குவோம்,’ என்று சொல்லி அனுப்பி விட்டார்.
இது நடந்து சரியாக ஒரு மாதத்திற்குப் பின் அண்ணாமலை பல்கலைக் கழகத்தில் தேர்வு எழுத சிதம்பரம் வந்த போது , தேர்வுகளை எழுதி முடித்து விட்டு என் வீட்டிற்கு ப்ரியாவை அழைத்து வந்து விட்டேன்.
எனது உறவினர்கள் நண்பர்கள் புடை சூழ திருமணம் நடந்து முடிந்தது. இதற்கிடையில் சொன்ன படி குடும்பத்தினர் தற்கொலை செய்து கொள்வார்களோ என்று பயந்த படி இருந்தாள் ப்ரியா.
அவள் எதிர்பார்த்த படி ஒன்றும் நடக்கவில்லை ஆனால் எதிர்பாராத விதமாக திருமணம் முடிந்து ஒரு மாதத்திற்குள் சமாதானத்திற்கு வந்தார்கள் அவளின் அப்பாவும், அம்மாவும்.
கோவையில் ஒரு வரவேற்பு விழா நடத்தினார்கள்அவர்களின் உறவினர்கள் முன்னிலையில்.
அன்றைக்கு இரவே சென்னைக்கு கிளம்பினோம் நானும் , ப்ரியாவும் எனது பெற்றோரும் .
கிளம்புவதற்கு சற்று முன் என்னை தனியே அழைத்து என் மாமனார் ‘ அவளை நல்லா அடக்கி வையுங்க, நான் என் பொண்டாட்டியை வச்சிருக்க மாதிரி. ஏய்னு சத்தம் போட்டா ஒன்னுக்கு போயிரு வா’ என்று எந்த மாமனாரும் இது வரை உலகில் வழங்கி இராத அறிவுரை வழங்கினார்.
அம்மாவும் , அப்பாவும் சென்னை வந்து நான் பார்த்து வைத்த வீட்டிற்கு முன் பணம் கொடுத்தார்கள்.
வீட்டிற்குத் தேவையான பொருட்களை சரவணா ஸ்டோரில் வாங்கிக் கொடுத்து விட்டு,இரண்டு மாதத்திற்குத் தேவையான மளிகைப் பொருட்களுக்கும் வாங்கி வைத்தார்கள்.
கையில் 2500 பணம் கொடுத்து விட்டு மகனே இனி உன் சமத்து என்று சொல்லி விட்டு கிளம்பிவிட்டார்கள்.
இந்த நாளுக்கு இடைப் பட்ட மூன்றரை ஆண்டுகளில் சில முறை தான் ஊருக்குப் போய் இருக்கிறோம்.
மருமகனாக ப்ரியாவீட்டிற்கு போயிருந்த போது கூட அதே போல் குடித்து வீட்டு சொன்னதையே சொல்லி உயிரை எடுத்துக் கொண்டிருந்தார்.
காதலின் போது கட்டாயமாக தாங்கிக் கொள்ள நேர்ந்தது.
திருமணத்தின் பின் இரண்டாம் முறை போயிருந்த போது பகலில் குடித்து விட்டு உளற ஆரம்பித்தார் பொறுக்க மாட்டாமல் உடை மாற்றிக் கொண்டு பேக்கை எடுத்துக் கொண்டு கிளம்பி விட்டேன்.
மாமனார் இரண்டு முறை சென்னை வந்திருக்கிறார்.
ப்ரியாவின் தங்கை வேதாவிற்கு பள்ளியில் முழு ஆண்டுத் தேர்வு விடுமுறை விட்டிருந்த போது அவளை அழைத்துக் கொண்டு முதன் முறை வந்திருந்தார்.
ரயிலில் வந்து இறங்கி வீட்டிற்கு வந்த போது இரவு 10 மணியாகி விட்டது. சாப்பிட டிபன் கொடுத்த போது கறி பக்கத்துல எங்கயாவது கடையில் கிடைக்குமா என்றார். நானும் ப்ரியாவும் அதை எதிர் பார்க்கவில்லை.
நாளைக்கு எடுத்து சமைச்சுக்கலாம் என்று ஒருவழியாய் சமாதானப் படுத்தி விட்டோம்.
மறுநாள் போரடிக்கிறது என்றார். பொண்ணு வீட்டிற்கு வந்திருக்கும் காரணத்தை வைத்தாவது தண்ணியடிக்காமல் இருப்பார் என்று நினைத்தேன். மாலையில் அவரால் முடியவில்லை.
தண்ணியடிக்க வேண்டும் கடை எங்கே இருக்கிறது கூப்பிடுப் போக வேண்டும் என்றார். எனக்கு ஒரு கட்டத்திற்கு மேல் மறுக்க முடியவில்லை.
கடையை மட்டும் காட்டுங்கள். வரும் போது நானே வந்து விடுகிறேன் என்றார் . ஒப்புக் கொண்டேன்.
வீட்டிலிருந்து பக்கத்தில் தான் கடை. போகும் போதே வழியெல்லாம் நன்றாகப் பார்த்துக் கொண்டார்.தெருப் பெயர், வீட்டு எண்ணை சொல்லச் சொல்லி மனப் பாடம் செய்து கொண்டார்.
கடையைப் பார்த்ததும் பக்தனுக்கு கோவிலைக் கண்டதும் வரும் பக்தி மாதிரி முகம் மலர்ந்து உள்ளே சென்றார்.
சரியாக வந்து விடுவேன் நீங்கள் கிளம்பலாம் என்று அவர் சொல்லி இருந்தாலும் எனக்கு மனசு கேட்கவில்லை. கூடவே இவர் சரியாக வீட்டிற்கு வருகிறாரா என்பதைப் பார்க்க வேண்டும் என்ற ஆவல்.
அவருக்குத் தெரியாமல் காத்திருந்து பின் தொடர முடிவு செய்தேன்.
அரை மணி நேரம் கழித்து வெளியில் வந்தார். பக்கத்துக் கடையில் சிகரெட் வாங்கினார்.
நடக்கத் துவங்கினார். சரியான திசை தான்.
அவர் திரும்பினாலும் உடனே தெரியாத அளவு இடைவெளியில் பின் தொடர்ந்தேன்.
அவரின் நடையில் தள்ளாட்டம் இல்லை. எத்தனை வருட சர்வீஸ். மகள் வீடு என்பதால் குறைவாகக் கூட குடித்திருக்கலாம்.
சரியான பாதை வழியாகவே போனார்.
இன்னும் ஒரு தெரு தான் இருந்தது. அதைத் தாண்டினால் எங்கள் தெரு.
நான் அவரைக் கவனித்த படியே நடந்தேன்.
சடாரென எங்கள் தெருவுக்கு முந்தைய தெருவில் திரும்பி நடக்கத் துவங்கினார்.
நான் நடையை விரைவு படுத்தினேன். அவர் என்ன தான் செய்கிறார் என்பதைப் பார்க்கிற ஆவலும் இருந்தது.
இடது பக்கம் ஒரு வீட்டிற்குள் நுழைய காலடி எடுத்து வைத்தார். விரைந்து போய் அவர் கைகளைப் போய் பிடித்துக் கொண்டேன். அதிர்ந்து பர்த்தார். நம்ம வீடு அடுத்த தெருவில் என்றேன்.
எங்கள் வீட்டின் எண் தான் அவர் நுழைந்த வீட்டிற்கும்.
நல்ல வேளை பின்னாலேயே வந்தீங்க என்று சொல்லி குழந்தை மாதிரி சிரித்தார். ப்ரியாவிடம் இதைச் சொல்லி விடாதீர்கள் என்று வேண்டிக் கொண்டார்.
அதன் பின் ஓரிரு நாளில் கிளம்பிவிட்டார். அவரின் சுதந்திரமும், அதிகாரமும் கொடிகடிப் பறக்கும் அவரின் வீட்டிற்கு அவசர அவசரமாய் கிளம்பிவிட்டார்.
அதன் பிறகு ப்ரியாவின் வளை காப்பிற்கு முந்தைய நாள் சென்னைக்கு மீண்டும் வந்தார்.
அவளின் அப்பா, அம்மா, தங்கைகள், எனது அப்பா, அம்மா எல்லோரும் வந்திருந்தார்கள்.
மூன்று ஆண்டுகள் எனது அப்பா, அம்மா தொடர்ந்த நச்சரிப்பை இனியும் தாங்க முடியாது என்ற ஒரு கட்டத்தில் குழந்தைக்கு ஒப்புக் கொண்டோம்.
வளைகாப்பை சென்னையிலேயே நடத்த வேண்டுமென்று நானும், ப்ரியாவும், விருப்பப் பட்டோம்.
கல்யாணம் பொள்ளாச்சியில், வரவேற்பு கோவையில், சென்னையில் இருக்கும் நண்பர்களுக்கு விருந்தளிக்க ஒரு வாய்ப்பாக இதைக் கருதினோம்.
ப்ரியாவின் அப்பாவும், அம்மாவும் ஒப்புக் கொள்ளவில்லை. அதை பொறுமையாய் சொல்லியிருந்தால் கூட பரவாயில்லை. நாங்கள் கிளம்புகிறோம் என்று பேக்கைத் தூக்கிவிட்டார்கள். அதோடு ஏதோ எசகு பிசகாக வார்த்தை ப்ரியாவின் அம்மாவோ அப்பாவோ சொல்ல எனக்கு வந்த கோபத்தில் ஏதோ பேச அது பெரும் சண்டையாக முடிந்தது.
அனைவரும் மதிக்கும் படியாய் வாழ்ந்து கொண்டிருக்கும் இடத்தில் பெயரை கெடுக்கும் படியாக நடந்து கொண்டது என்னை ஆத்திரமுற்றவனாக்கி இருந்தது.
கொஞ்ச நேரத்திற்கு என்ன நடந்தது என்று ஒன்றும் புரியவில்லை. ஆளுக்காள் கத்தி, திட்டி பெரும் புயல் அடிப்பது போலிருந்தது.
எதையும் யோசிக்காமல் ப்ரியாவின் அப்பா கிளம்ப அம்மாவும், ப்ரியாவின் இரு தங்கைகளும் கிளம்பி விட்டார்கள்.
இரண்டு நாட்கள் கழித்து என் அப்பா, அம்மாவே சென்னயில் வளைகாப்பை நடத்தி விட்டு ப்ரியாவைக் கூட்டிக் கொண்டு திரும்பினார்கள்.
பின் வீட்டைக் காலி செய்து விட்டு நானும் கோவைக்குப் போய்ச் சேர்ந்தேன்.
குப்புசாமி மருத்துவமனையில் அவ்வப் போது செக்கப்புக்கு போய் வருவோம்.
அப்படி ஒருநாள் போய்விட்டு வரும் போது ப்ரியாவின் அம்மா வந்துவிட்டுப் போனதாக என் அம்மா சொன்னார்கள்.
அவர்கள் ஏன் வந்தார்கள் வந்தால் பார்க்க முடியாது என்று சொல்லிவிடுங்கள் என்று அம்மாவிடம் சொல்லிவிட்டேன்.
ஒரு வழியாய் நிலா பிறந்தாள்.
நிலா பிறந்து ஒரு 10 நாள் இருக்கும் ஒரு நாள் மாலை ப்ரியாவின் அப்பாவும், அம்மாவும், தங்கைகளும் எங்கள் வீடு நோக்கி வந்து கொண்டிருப்பதை தூரத்திலேயே பார்த்து விட்டேன்.
ப்ரியாவிடம் சொன்னேன் வரட்டும் நல்லா கேட்கிறேன் என்றாள். நீ பேசுனா தப்பாயிடும் உள்ள போஎன்ன நடந்தாலும் வெளிய வராதே என்று சொல்லிவிட்டேன்.
வீட்டின் கேட்டைத் திறந்து உள்ளே நுழையும் போதே திண்ணையில் நின்றிருந்தேன்.
கோபம் எனக்கு பொங்கிப் பொங்கி வந்தது. வாயும் வயிறுமாய் இருந்தவளை ஒருநாள் கூட பக்கத்தில் வைத்துப் பார்த்துக் கொள்ளாமல், வலியில் துடித்து கதறும் போது ஆறுதல் சொல்லாமல் தனது பொறுப்புகளையெல்லாம் தட்டிக் கழித்து விட்டு, ஊரில் வந்து கேவலப் படுத்தி விட்டு எல்லாம் முடிந்த பின் என்ன தைரியமாக வருகிறார்கள்.
‘எங்க வந்தீங்க’ வர வரவே வார்த்தையால் நிறுத்தினேன்.
‘ எங்க பொண்ணப் பாக்கிறதுக்கு ‘ பதிலாய் சொன்னார்.
‘ இது வரைக்கும் பாத்ததெல்லாம் போதும், நாங்க பாத்துக்கிறோம், கிளம்புங்க ‘ என்றேன்.
அவருக்கு என்ன பேசுவதென்று தெரியவில்லை.
‘ அப்ப இனி எல்லாம் அவ்வளவு தானா ? எல்லாம் முடிஞ்சிருச்சா? ‘ என்றார் வேகமாக.
‘அப்படித் தான் ‘ என்றேன் முடிவாக.
கோபம் பெருகிய முகத்தோடு முறைத்து விட்டுத் திரும்பினார்.
அது தான் எனக்கும் அவருக்குமான கடைசிச் சந்திப்பு என்பது தெரியவில்லை அப்போது.
ஒருவேளை தெரிந்திருந்தால் அந்த நிகழ்வு அப்படி இருந்திருக்காது என்பது உறுதி.
எப்படி அவரின் இறந்த உடலைக் காண்பது என்று தெரியவில்லை. ஒருவேளை பாவி என்று மாமியார் மண்ணெடுத்து வீசி வசை பாடினால் என்ன செய்வது என்று மனம் அடித்துக் கொண்டது பயண வழியெல்லாம்.
இரவு வரை எங்களுக்காக காத்திருந்தது சடங்குகள்.
ப்ரியா குழந்தையை காலடியில் போட்டு கதறினாள்.
ப்ரியா தனது தங்கையிடம் கொடுத்த நிலாவின் போட்டோவை அவர் பார்த்துவிட்டு எல்லோரிடமும் பேத்தி என்று காட்டிக் கொண்டிருந்தாராம்.
ஓரிரு நாட்களில் கிளம்பி சென்னை வந்து பேத்தியைப் பார்க்கவும் முடிவு செய்திருந்தாராம்.
வழக்கம் போல் இரவு தண்ணியடித்து விட்டுப் படுத்தவர். உறக்கத்திலேயே போயிருக்கிறது உயிர்.
அந்த வீட்டில் இருந்த ஒவ்வொரு கணமும் மனம் கொந்தளித்து இருந்தது.
இறந்த பிறகு லேமினேட் செய்து மாட்டப் படிருந்த புகைப் படத்திலிருந்து சிரித்த படி அவர் பார்த்துக் கொண்டே இருந்தார்.
அவர்களின் வீட்டில் திருவாளர் ஆறுமுகம் அவர்கள் படமாய் இருக்கிறார். ஆனால் எனக்குள் உயிருள்ள வரை வைத்துப் போற்ற வேண்டிய பாடமாய்.